அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு
ரயிலில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் நோக்கில், விரைவில் ராஜ்தானி, ஷதாப்தி போன்ற அதிவேக ரயில்களில், CCTV கேமராக்கள் பொருத்தப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, ராஜ்தானி, துரந்தோ மற்றும் ஷதாப்த்தி போன்ற பிரீமியம் ரயில்களின் 14,387 பெட்டிகளும், குறிப்பிட்ட தடத்தில் செல்லும், EMU, MEMU மற்றும் DEMU போன்ற பாசேன்ஜர் ரயில்களும் அடங்கும். இந்த கேமராக்கள், அதிர்ச்சி மற்றும் அதிர்வுகளை தாங்கும் வகையில் அமைய பெற்றிருக்கும். கிட்டத்தட்ட, 60,000-க்கும் மேற்பட்ட பெட்டிகளில், இந்த சிசிடிவி கேமரா, கதவுகள், வெஸ்டிபுல் பகுதி மற்றும் நடைபாதை பகுதிகளை கண்காணிக்கும் விதத்தில் பொருத்தப்படும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு, 2,930 ரயில் பெட்டிகளில், சிசிடிவி பொறுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது.
இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு நடவடிக்கை
இன்டர்நெட் மூலமாகவும் லிங்க் செய்யப்பட்ட இந்த CCTVகள், வீடியோ பகுப்பாய்வு மற்றும் முக அங்கீகார அமைப்புகளையும் கொண்டிருக்கும். அருகே இருக்கும் RPF அலுவலகம், பிரிவு மற்றும் மண்டல தலைமையகத்தில் இருந்தும், இந்த சிசிடிவி காட்சிகளை கண்கணிக்க முடியும். மேலும், அவற்றை தொலைதூரத்தில் இருந்தும் இயக்கலாம். ஒவ்வொரு கோச்சிலும் குறைந்தபட்சம் இரண்டு பேனிக் பட்டன்கள் அமைக்கப்படும். அவற்றை அழுத்தினால் அருகில் உள்ள RPF போஸ்ட் அல்லது டேட்டா சென்டரை எச்சரிக்கும். "இந்த புதிய அமைப்பு, எதிர்மறையான சூழ்நிலைகள் மற்றும் சம்பவங்களை, திறம்பட எதிர்கொள்ள ஒரு கருவியாக செயல்படும்." என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. ஏற்கனவே, வந்தே பாரத் மற்றும் தேஜஸ் போன்ற அனைத்து அதிவேக ரயில்களிலும், சிசிடிவி கேமராக்கள் உள்ளன.