இந்தியாவில் அதிகம் திருடப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் எவை?
இந்தியாவில் பைக்குகள் விற்பனை செய்யப்படும் அளவிற்கு, பைக் திருட்டுக்களும் அதிக அளவிலேயே நடைபெற்று வருகிறது. ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகும் பைக்குகள் அனைத்தும் அதிக அளவில் விற்பனையாவதில்லை. பயனர்களைக் கவர்ந்த, அதிக பயன்களைக் கொண்ட பைக்குகளே வாடிக்கையாளர்களைக் கவர்கிறது. பைக் திருட்டுக்களும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொருத்தே திருடப்படுகின்றன என்பது தான் சற்று ஆச்சரியமான செய்தி. ஆம், ரீசேல் மதிப்பு அதிகம் கொண்ட, வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கிறத பைக்குகளே பெரும்பாலும் அதிகம் திருடப்படும் பைக்குகளாகவும் இருக்கின்றன. விற்பனையில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த கம்யூட்டர் பைக் மாடலான ஹீரோ ஸ்ப்ளெண்டப் பிளஸ்ஸே பைக் திருடர்களுக்கு பிடித்தமான பைக்காகவும், அதிகமாகத் திருடப்படும் பைக்காவும் இருக்கிறது.
அதிகம் திருடப்படும் பைக் மாடல்கள்:
பயன்படுத்தப்பட்ட பைக் விற்பனைச் சந்தையில் ஸ்ப்ளெண்டர் மாடலுக்கே அதிக வரவேற்பு இருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் இருப்பது பஜாஜின் பல்சர் சீரிஸ். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்போர்ட்டி கம்யூட்டரான பல்சர் பைக் அதிகமாகத் திருடப்படும் பைக்குகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. விலை அதிகமான பைக்குகளில் அதிகம் திருடப்படுவது ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 மாடல் தானாம். இந்த பைக்குக்கு பயன்படுத்தப்பட்ட பைக் விற்பனைச் சந்தையில் அதிக டிமாண்டு இருக்கிறதாம். ஸ்கூட்டர் வகையறாவில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரே அதிகம் திருடப்படும் ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது. இப்படித் திருடப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள், பைக்கின் நிலையைப் பொருத்து மீண்டும் விற்பனை செய்யப்பட்டுவிடுகிறது அல்லது அதிலிருந்து ஸ்பேர் பாகங்கள் மட்டும் பிரித்தெடுத்து விற்பனை செய்யப்படுகின்றனவாம்.