இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம்
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் 51% பங்குகளை சஜ்ஜன் ஜின்டாலின் தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சீனாவின் SAIC மோட்டார் நிறுவனத்தை தாய் நிறுவனமாகக் கொண்டது எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம். ஏற்கனவே எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் ரூ.5,000 கோடியை முதலீடு செய்திருக்கிறது SAIC மோட்டார். அதனைத் தொடர்ந்து மேலும் ரூ.5,000 கோடியை கடந்த சில ஆண்டுகளாகவே முதலீடு செய்ய முயற்சி செய்து வருகிறது SAIC மோட்டார். ஆனால், சீனா மற்றும் இந்தியா இடையே இருக்கும் பிரச்சினைகள் காரணமாக இந்தியாவில் அந்நிறுவனத்தால் நேரடியாக முதலீடு செய்ய முடியவில்லை. இதனைத் தொடர்ந்தே தற்போது இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு 51% பங்குகளை விற்பனை செய்யவிருக்கிறது SAIC மோட்டார்.
விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்:
இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்படவிருக்கும் நிலையில், எம் மோட்டார் இந்தியாவின் 45%-48% சஜ்ஜின் ஜின்டால் வசமும், 5%-8% பங்குகளை எம்ஜி மோட்டாரின் இந்திய ஊழியர்கள் மற்றும் டீலர்களும், SAIC மோட்டார் நிறுவனம் 49% பங்குகளையும் பெறவிருக்கின்றன. கடந்த பல மாதங்களாகவே இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நான்கு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சஜ்ஜன் ஜின்டால் JSW குழுமத்தின் தலைவராக இருக்கும் நிலையில், அந்தக் குழுமத்தைச் சேர்ந்த JSW எனர்ஜி மற்றும் JSW ஸ்டீல் ஆகிய நிறுவனங்களுக்கும் இந்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.