இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ்-பென்ஸின் புதிய G 400d மாடல் கார்
அப்டேட் செய்யப்பட்ட G-கிளாஸ் லைன்-அப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ். 2019-ல் வெளியிடப்பட்டு தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் G 350d மாடலுக்குப் பதிலாக, புதிதாக G 400d மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ். இந்த புதிய மாடலின் மூலம் இந்தியாவில் டாப் எண்டு லக்சரி செக்மண்டிலேயே தங்கள் கவனத்தை குவித்திருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ். இது ஒரு ஆஃப்ரோடர் என்பதால் 241மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ் மற்றும் 700மிமீ வாட்டர் வேடிங் திறனைக் கொண்டிருக்கிறது G 400d. AMG மற்றும் அட்வென்சர் என இரண்டு வெர்ஷன்களாக இந்த புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இதன் டெலிவரி தொடங்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஜின் மற்றும் விலை:
இந்த புதிய 400d-யில் 330hp பவர் மற்றும் 700Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய வெளிப்படுத்தக்கூடிய, ஆறு சிலிண்டர்கள் கொண்ட, 3.0 லிட்டர், OM656 டீசல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ். முந்தைய மாடல் இன்ஜினின் பவர் மற்றும் டார்க்கை விட கூடுதல் பவர் மற்றும் டார்க்கை புதிய மாடலின் இன்ஜின் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம், நான்கு வீல்களுக்கும் பவர் ட்ரான்ஸ்மிஷன் நடைபெறுகிறது. மேலும், 0-100 கிமீ வேகத்தை முந்தைய மாடலை விட 1 நொடி வேகமாக 6.4 நொடிகளில் தொடுகிறது புதிய G 400d. இந்தியாவில் ரூ.2.55 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது புதிய மெர்சிடீஸ்-பென்ஸ் G 400d. தற்போது இதனை ரூ.1.5 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.