
புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்
செய்தி முன்னோட்டம்
புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். உலகளவில் மிகவும் பிரபலமான E-கிளாஸ் செடானில், உட்பக்கம் நல்ல இடவசதியுடன் கூடிய மாடலாக இந்த லாங் வீல்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
இன்னும் சில மாதங்களில் சீனாவில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய E-கிளாஸ் லாங் வீல்பேஸ் செடானை. 2024ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்.
ஏற்கனவே முந்தைய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் செடானும் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது சீனாவில் அறிமுகமாகியிருக்கும் மாடலை பெரிய மாற்றங்கள் ஏதுமின்றியே இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது மெர்சிடீஸ் பென்ஸ்.
மெர்சிடீஸ்-பென்ஸ்
மெர்சிடீஸ்-பென்ஸ் E-கிளாஸ் லாங் வீல்பேஸ்:
புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலானது, முந்தைய தலைமுறை மாடலை விட 18மிமீ நீளமான வீல்பேஸாக 3,094மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கிறது. மேலும், முந்தைய தலைமுறை மாடலை விட 20மிமீ அகலமாகவும் இருக்கிறது புதிய தலைமுறை மாடல்.
கூடுதல் வீல்பேஸ் நீளத்தைத் தவிர, E-கிளாஸின் ஸ்டாண்டர்டு வீல்பேஸ் மாடலுக்கும், லாங் வீல்பேஸ் மாடலுக்கும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. நீளமான வீல்பேஸூக்காக டிசைனில் மட்டும் மாற்றங்கள் இருக்கிறது.
சீனாவில் டீசல் இன்ஜின் கொண்ட லாங் வீல்பேஸ் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் டீசல் இன்ஜினுடன் இந்த மாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.1 கோடி விலையில் இந்தியாவில் இந்த E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடல் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.