ஸ்கார்ப்பியோ N பிக்அப், எலெக்ட்ரிக் தார்.. புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மஹிந்திரா
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் உலகளாவிய நிகழ்வு ஒன்றை நடத்தவிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா. இந்த நிகழ்வில் தங்களுடைய புதிய மாடல்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அந்த நிகழ்வில் நீண்ட வீல்பேஸ் கொண்ட பிக்-அப் மாடல் ஒன்றை அறிமுகம் செய்யவிருப்பதை, ஒரு டீசர் மூலம் அறிவித்திருந்தது மஹிந்திரா. இந்த மாடலை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கார்ப்பியே N காரை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறது அந்நிறுவனம். இது மட்டுமின்றி, 5-டோர் தார், ப்யூச்சரிஸ்டிக்கான கான்செப்ட் டிசனைக் கொண்ட புதிய தார் மற்றும் இதனை அடிப்படையாகக் கொண்ட முழுமையான எலெக்ட்ரிக் தார் ஆகிய கான்செப்ட் மாடல்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இத்துடன், புதிய டிராக்டர் பிளாட்ஃபார்ம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறது மஹிந்திரா.
மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் தார் கான்செப்ட் மாடல்:
4-வீல் டிரைவ் மற்றும் ப்யூச்சரிஸ்டிக்கான டிசைனைக் கொண்ட எலெக்ட்ரிக் தார் கான்செப்ட் மாடலை தென்னாப்பிரிக்க நிகழ்வில் அறிமுகப்படுத்தவிருக்கிறது மஹிந்திரா. 4-வீல் டிரைவ் கொண்ட எலெக்ட்ரிக் கார்களில் பெரும்பாலும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களையே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், புதிய தாரில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை மஹிந்திரா பயன்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், எலெக்ட்ரிக் தாரின் ஒவ்வொரு வீலும் 45 டிகிரி வரை திரும்பும் வகையில் அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறதாம். எனவே, கிராப் ஸ்டீரிங் வசதியும் எலெக்ட்ரிக் தார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தாரை லேடர் பிரேம் சேஸியைக் பயன்படுத்தி தான் கட்டமைக்கவிருக்கிறதா அல்லது எலெக்ட்ரிக் தாருக்கு வேறு திட்டங்களை அந்நிறுவனம் வைத்திருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.