
புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் தார் (தார்.e) மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா
செய்தி முன்னோட்டம்
மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தார்.e' கான்செப்ட் மாடல் நேற்று அறிமுகமாகியிருக்கிறது. இந்தியாவின் சுதந்திர நாளான நேற்று, தென்னாப்பிரிக்காவின் நடைபெற்ற நிகழ்வில், புதிய கார்களையும், தங்கள் எலெக்ட்ரிக் வாகன டைம்லைனையும் பகிர்ந்திருக்கிறது மஹிந்திரா.
எரிபொருள் தாரை அடிப்படையாகக் கொண்டே புதிய தாரை மஹிந்திரா வடிவமைத்திருக்கும் என எதிர்பார்த்திருக்க, முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் தார் மாடலைக் கண்முன் நிறுத்தியிருக்கிறது மஹிந்திரா.
இந்த கான்செப்ட் எலெக்ட்ரிக் தாரை தங்களுடைய புதிய INGLO ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்மில் உருவாக்கியிருக்கிறது மஹிந்திரா. எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்காகவே இந்தக் காரை மஹிந்திரா உருவாக்கியிருப்பது குறிப்பிடத்கக்கது.
இந்த எலெக்ட்ரிக் தார் மட்டுமின்றி மேலும், பல எலெக்ட்ரிக் கார்களையும் இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா
மஹிந்திரா எலெக்ட்ரிக் தார் (தார்.e):
தொடக்கத்தில் இந்த INGLO மாடல்களுக்கான பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களை சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனத்திடமிருந்து பெற மஹிந்திரா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், தார்.e விற்பனைக்கு வரும் போது, அதன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திடமிருந்து பெறவும் மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது.
தற்போது முன்பக்கம் 80kW மற்றும் பின்பக்கம் 210kW பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், பின்னாளில் இந்த அளவு மாறுபடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற INGLO எஸ்யூவி மாடல்களைப் போல, 60kWh பேட்டரியே இதிலும் பயன்படுத்தப்படும் என்றாலும், 80kWh பேட்டரியைப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால், அக்டோபர் 2026 வரை இந்த எலெக்ட்ரிக் தாரின் உற்பத்தியை நம்மால் எதிர்பார்க்க முடியாது.