தங்களுடைய ப்ரீமியம் எலெக்ட்ரிக் காரான EV9-யும் இந்தியாவிற்குக் கொண்டு வரும் கியா
தென்கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய முன்னணி எஸ்யூவி மாடலான செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் மாடலை நேற்று (ஜூலை 4) அறிமுகப்படுத்தியது. தற்போது அந்நிறுவனம் தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் விரைவில் இந்தியாவில் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் தங்களது ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார் மாடலான EV6-ஐ வெளியிட்டது கியா. EV6 மாடலின் அப்டேட்டட் வெர்ஷன் ஒன்றையும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். இந்தியாவில் தங்களது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக, EV9 மாடலை, அடுத்த 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது கியா.
இந்தியாவில் கியாவின் திட்டம் என்ன?
உலகளவில், கியாவின் முன்னணி எலெக்ட்ரிக் காராக விற்பனை செய்யப்படவிருக்கும் EV9-ன் கான்செப்ட் மாடலை, இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது கியா. அந்த கான்செப்ட் மாடலின் தயாரிப்பு வடிவத்தை கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். தங்களது ப்ரீமியம் மாடல்களுள் ஒன்றான EV9-னை அடுத்த ஆண்டு இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது கியா. தற்போது EV6 மாடலே ரூ.60 லட்சத்திற்கும் மேலான விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை விட கூடுதலான விலையிலேயே EV9 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கென குறைந்த விலையிலான மாஸ் மார்க்கெட் EV-க்களையும் திட்டத்தில் வைத்திருக்கிறது கியா. ஆனால், அவை 2025 அல்லது அதற்கடுத்து வரும் ஆண்டுகளிலேயே வெளியாக வாய்ப்பிருக்கிறது.