கேடிஎம் மாடல்களுக்கு போட்டி! இந்தியாவில் காட்சியளித்த புதிய கவாசாகி Z300; சிறப்பம்சங்கள் இதோ
செய்தி முன்னோட்டம்
ஜப்பானிய முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான கவாசாகி, தனது புதிய Z300 ஸ்ட்ரீட்-நேக்கட் பைக் மாடலை இன்று (அக்டோபர் 12) பெங்களூருவில் நடைபெற்ற டீலர் நிகழ்வில் முதன்முறையாகக் காட்சிப்படுத்தியுள்ளது. நிஞ்சா 300 மாடலின் தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், இந்தியாவில் கவாசாகியின் ஆரம்ப நிலை Z-சீரிஸ் வரிசையில் இணையவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ முன்பதிவு அக்டோபர் 19 அன்று தொடங்குகிறது. அன்றைய தினமே இதன் விலையும் அறிவிக்கப்படும்.
முக்கிய அம்சங்கள்
என்ஜின் திறன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள்
கவாசாகி Z300 பைக்கில் 296 cc லிக்விட்-கூல்டு பேரலல்-ட்வின் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது 38.4 bhp ஆற்றலையும் 26.1 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
17-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் அகலமான ஹேண்டில்பார் ஆகியவை சவாரி செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் டிஸ்ப்ளே
Z900 தோற்றம் மற்றும் ஸ்மார்ட் TFT டிஸ்ப்ளே
பெரிய Z900 மாடலின் வடிவமைப்பைத் தழுவி, ஆக்ரோஷமான நேக்கட்-பைக் பாணியில் இந்த Z300 உருவாக்கப்பட்டுள்ளது.
கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் காட்சிப்படுத்தப்பட்ட இப்பைக்கில், ஸ்மார்ட்போன் புளூடூத் இணைப்பு வசதி கொண்ட TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் அழைப்பு அறிவிப்புகள் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் தகவல்களைத் திரையிலேயே காண முடியும்.
நேராக நிமிர்ந்து அமர்ந்து ஓட்டும் வசதியான சீட்டிங் பொசிஷன் தினசரி நகரப் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
சந்தைப் போட்டி
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சந்தைப் போட்டி
தற்போது இந்தியாவில் விற்கப்படும் கவாசாகி நிஞ்சா 300 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.34 லட்சமாக உள்ளது.
புதிய Z300 மாடலானது நிஞ்சாவை விடக் குறைந்த விலையில், அதாவது ரூ.3 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலைப் புள்ளியில் அறிமுகமாகும் பட்சத்தில், சந்தையில் பிரபலமாக இருக்கும் கேடிஎம் 390 டியூக் மற்றும் டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310 ஆகிய பைக்குகளுக்கு இது சவாலாக அமையும்.