
சென்னை எழும்பூரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஜாவா தின நிகழ்வு
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறு, உலக ஜாவா மோட்டார்சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உலகின் அனைத்து மூலைகளில் இருக்கும் பைக் பிரியர்களும், ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர்களும் அன்றைய தினத்தை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வருட ஜூலை மாதத்தின் இரண்டவாது ஞாயிறான நேற்று (ஜூலை 9), சென்னை எழும்பூரில் ஜாவா தின நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையைச் சேர்ந்த பைக்கர் குழுக்களான ரோரிங் ரைடர்ஸ் மற்றும் ரீபார்ன் ரைடர்ஸ் ஆகிய இரு குழுக்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னையைச் சேர்ந்த பல்வேறு பைக் ஆர்வர்கள், ஜாவா மற்றும் யெஸ்டி பைக் பிரியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜாவா
சென்னையில் ஜாவா தின நிகழ்வு:
இந்த நிகழ்வில் 1960-களில் இருந்து இன்றைய தினம் வரை வெளியான பல்வேறு ஜாவா பைக்குகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
முந்தைய காலத்து இரண்டு ஸ்ட்ரோக் இன்ஜின்களைக் கொண்ட பழைமையான ஜாவா மாடல்கள் முதல், இன்றைய நான்கு ஸ்ட்ரோக் இன்ஜின்களைக் கொண்ட பெரக் மற்றும் ஸ்கிராம்பிளர் வரை பல ஜாவா மற்றும் யெஸ்டி(Yezdi) பைக்கின் அணிவகுப்பு பைக் ரசிகர்களுக்கு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
மேலும், இரண்டு ஸ்ட்ரோக் இன்ஜின்களை இயக்கும் போது உருவான சத்தம் பழைய ஞாபகங்களைத் தூண்டியதாக, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பைக் பிரியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
200 மேற்பட்ட ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வு, சிறந்த ஜாவா தின அனுபவமாக இருந்ததாகவும், நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.