மீண்டும் இந்தியாவில் செயல்பாட்டிற்கு வருகிறதா ஃபியட்?
ஜீப் மற்றும் சிட்ரன் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ஸ்டெல்லான்டிஸ் நிறுவனமானது, முன்பு இந்தியாவில் செயல்பாடுகளைக் கொண்டிருந்த தங்களது மற்றொரு நிறுவனமான ஃபியட்டினை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வந்த ஸ்டெல்லான்டிஸின் துணை நிறுவனமான ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனமானது, குறைவான விற்பனை மற்றும் அதீத செயல்பாட்டு செலவுகளின் காரணமாக 2019-ல் இந்தியாவிலிருந்து வெளியேறியது. ஆனால், தற்போது மீண்டும் அந்த நிறுவனத்தின் மூலம் புதிய கார்களை விற்பனை செய்ய ஆலோசித்து வருகிறது ஸ்டெல்லான்டிஸ். இந்த முடிவிற்கு, அந்நிறுனம் இந்த மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்திய STLA M ப்ளாட்ஃபார்மே காரணம்.
ஸ்டெல்லான்டிஸ் STLA M ப்ளாட்ஃபார்ம்:
சர்வதேச அளவில் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க அந்நிறுவனம் உருவாக்கி வரும் நான்கு ப்ளாட்ஃபார்ம்களில் முதல் ப்ளாட்ஃபார்மே இந்த STLA M. மாடுலார் ப்ளாட்ஃபார்மான இதில், ஜீப், சிட்ரன், ஃபியட் மற்றும் ஆல்ஃபா ரோமியோ உள்ளிட்ட தங்களது பல்வேறு துணை நிறுவனங்களின் கார்களை தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஸ்டெல்லான்டிஸ். இந்த ப்ளாட்ஃபார்மில், ப்ரண்ட் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ், செடான், கிராஸ்ஓவர் மற்றும் எஸ்யூவி என அனைத்து வகையான கார்களையும் தயாரிக்க முடியுமாம். இதனாலேயே இந்த ப்ளாட்ஃபார்மின் மீது அதீத நம்பிக்கை வைத்து திட்டங்களைத் தீட்டி வருகிறது அந்நிறுவனம். தற்போது இந்தியாவில் மிட்சைஸ் எஸ்யூவியான 'C3 ஏர்கிராஸி'ன் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது ஸ்டெல்லான்டிஸின் துணை நிறுவனமான சிட்ரன்.