154 நாடுகளில் இந்திய பைக்குகளின் ராஜ்ஜியம்: ஏற்றுமதியில் மெகா சாதனை
செய்தி முன்னோட்டம்
கொலம்பியாவின் பரபரப்பான நகரங்கள் முதல் நைஜீரியாவின் வர்த்தக மையங்கள் வரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு நான்கு பைக்குகளில் ஒன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2025-26 நிதி ஆண்டில் இந்தியாவிலிருந்து 154 நாடுகளுக்கு பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வளர்ந்து வரும் உலக நாடுகளில் இரு சக்கர வாகனங்களின் முன்னணி உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஏற்றுமதி
51.8 லட்சம் பைக்குகள் ஏற்றுமதியாகி மெகா சாதனை
கடந்த 2025-26 நிதி ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 1.75 கோடி பைக்குகளில் 44.77 லட்சம் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வகை இரு சக்கர வாகனங்களையும் சேர்த்து மொத்தம் 51.8 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இது முந்தைய ஆண்டை விட 23.4 சதவீதம் அதிகமாகும்.
விரிவான தயாரிப்பு வரம்பு, இந்திய பிராண்டுகளின் தரம் மற்றும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை இந்த மெகா ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
மதிப்பு
ரூ. 35,253 கோடியாக உயர்ந்த ஏற்றுமதி மதிப்பு
இந்திய மோட்டார் சைக்கிள்களின் ஏற்றுமதி மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
நிதியாண்டு 17-18ல் ரூ. 12,903 கோடியாக இருந்த ஏற்றுமதி மதிப்பு நிதியாண்டு 25-26ல் ரூ.35,253 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
கொலம்பியா இந்திய பைக்குகளின் மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மெக்சிகோ, இலங்கை, நேபாளம், நைஜீரியா, பிரேசில் மற்றும் கினியா ஆகிய 7 நாடுகள் மட்டுமே இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் பாதியை ஈர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்கள்
பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களின் ஆதிக்கம்
இந்தியாவின் மொத்த பைக் ஏற்றுமதியில் 38 சதவீதப் பங்களிப்புடன் பஜாஜ் ஆட்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார் 27.5 சதவீதப் பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப், யமஹா, சுசுகி மற்றும் 2.5 சதவீத பங்களிப்புடன் ராயல் என்ஃபீல்ட் ஆகிய நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய பைக்குகளுக்கு உள்ள அதிக வரவேற்பே இந்த சாதனைக்குக் காரணமாகும்.