ஹீரோவின் அதிரடி! விடா VXZ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றது; 200 கிமீ ரேஞ்ச் இருக்குமா?
செய்தி முன்னோட்டம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான விடா VXZ (Vida VXZ) மாடலின் டிசைன் பேடன்ட்டை (Design Patent) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மிலனில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் புராஜெக்ட் VXZ (Project VxZ) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக், தற்போது இந்தியாவில் தயாரிப்பு நிலையை எட்டியுள்ளதை இந்த காப்புரிமை உறுதிப்படுத்துகிறது. இது ஹீரோ நிறுவனத்தின் விடா பிராண்டின் கீழ் வரும் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி
ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் உடன் கூட்டணி
விடா VXZ மோட்டார்சைக்கிள், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் (Zero Motorcycles) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. VXZ என்ற பெயரே விடா (Vida) மற்றும் ஜீரோ (Zero) ஆகியவற்றின் கூட்டணியைக் குறிக்கிறது. இருப்பினும், இது ஜீரோ நிறுவனத்தின் பைக்கின் மறுபதிப்பு (Rebadged) கிடையாது. மாறாக, இந்தியச் சாலைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றவாறு முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் (Ground-up platform) இது உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்
இந்த பைக் ஒரு ஸ்போர்ட்டியான 'ஸ்ட்ரீட்-நேக்கட்' (Street-naked) வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு: விளக்குகள்: விடா பிராண்டிற்கே உரித்தான வி-வடிவ எல்இடி டிஆர்எல்கள் (V-shaped LED DRLs) மற்றும் கூர்மையான ஹெட்லேம்ப். சஸ்பென்ஷன்: முன்புறத்தில் அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன். பிரேக்கிங்: முன் மற்றும் பின் சக்கரங்களில் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் (Petal disc brakes). இயக்கம்: செயின் டிரைவிற்குப் பதிலாக பெல்ட் டிரைவ் (Belt drive) சிஸ்டம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பம்: டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு மற்றும் பல்வேறு ரைடிங் மோட்கள்.
வேகம்
வேகம் மற்றும் மைலேஜ் (எதிர்பார்ப்பு)
பேடன்ட் படங்களில் உள்ள பேட்டரியின் அளவை வைத்துப் பார்க்கும் போது, இது ஜீரோ மோட்டார்சைக்கிள்களின் செயல்திறனை ஒட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ முதல் 275 கிமீ வரை ரேஞ்ச் வழங்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 135 கிமீ வரை இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஹீரோ நிறுவனம் இதன் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.
அறிமுகம்
அறிமுகம் எப்போது?
ஹீரோ விடா VXZ பைக்கின் தயாரிப்பு நிலை மாடல் 2026-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் EICMA கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் இதன் விற்பனை 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓலா ரோட்ஸ்டர் (Ola Roadster) மற்றும் ரிவோல்ட் RV400 போன்ற எலக்ட்ரிக் பைக்குகளுக்குப் பலத்த போட்டியாக அமையும்.