இந்தியாவிற்கான புதிய 'X 440' பைக்.. அறிமுகப்படுத்தியது ஹார்லி-டேவிட்சன்!
ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்வதற்கான உருவாக்கி வந்த பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது ஹார்லி-டேவிட்சன் நிறுவனம். ஒரு க்ரூஸர் பைக்கைப் போலவும் இல்லாமல் ஸ்போர்ட்டியான ஸ்டான்ஸூம் இல்லாமல் நியூட்ரலான பைக்காக இருக்கிறது ஹார்லி-டேவிட்சனின் புதிய 'X 440'. ஃபுட் பெக்குகள் மிகவும் முன்நோக்கியும் இல்லை, ஹேண்டில் பார்கள் பின்நோக்கியும் இல்லை. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் போன்று நிமிர்ந்து உட்காரும் வகையிலேயே இந்த பைக் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 18-இன்ச் முன்பக்க வீல்கள் மற்றும் 17-இன்ச் பின்பக்க வீல்களைக் கொண்டிருக்கிறது இந்த X 440. ஹெட்லைட் முதல் டெய்ல்லைட் வரை அனைத்துமே கிளாஸியான டிசைனைக் கொண்டிருக்கிறது. எக்ஸாஸ்டின் டிசைன் மட்டும் கொஞ்சம் சிம்பிளாக இருக்கிறது. அதன் வடிவமைப்பும் கிளாஸியாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இன்ஜின் மற்றும் பிற வசதிகள்:
இந்த பைக்கில் ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 440சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பவர் மற்றும் டார்க் குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. 20-25hp பவர் மற்றும் 30-40Nm டார்க்கை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜினுக்கு மேல் இருக்கும் ஃப்யூல் டேங்க்கானது இந்த பைக்குக்கு ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுக்கிறது. பின்பக்கம் சற்றே உயர்த்தி வைக்கப்பட்டது போல் இருக்கும் சிங்கிள் பீஸ் சீட்டே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்சைடு டவுன் போர்க் மற்றும் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு பக்கமும் சிங்கிள் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை மாதத் தொடக்கத்தில் வெளியாகிறது இந்த புதிய 'X 440'.