
புதிய டர்போ இவி 1000 மினி டிரக்கை அறிமுகம் செய்தது யுலர் மோட்டார்ஸ் நிறுவனம்; விலை ₹5.99 லட்சம்
செய்தி முன்னோட்டம்
யுலர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஒரு டன் எலக்ட்ரிக் மினி டிரக்கான, யுலர் டர்போ இவி 1000 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை வெறும் ₹5.99 லட்சம். இந்த வாகனம் டீசல் டிரக்குடன் ஒப்பிடும்போது, ஆண்டுக்கு ₹1.15 லட்சம் வரை சேமிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், வணிக பயன்பாட்டிற்கு இது மிகவும் மலிவான மற்றும் கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது. டர்போ இவி 1000, ஒரே சார்ஜில் 140-170 கிமீ வரை செல்லும் என கூறப்படுகிறது. இதன் செயல்திறன் மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. இது, 140 என்எம் டார்க்கையும், 13-இன்ச் வீல் பிளாட்பார்மில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கையும் கொண்டுள்ளது.
நகர்ப்புறம்
நகர்ப்புறத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைப்பு
இது பாதுகாப்பை சமரசம் செய்யாமல், நகர்ப்புற சாலைகளை எளிதாக சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எந்தவொரு CCS 2 பொது சார்ஜிங் நிலையத்திலும் வெறும் 15 நிமிடங்களில் 50 கிமீ தூரம் பயணிக்க போதுமான சார்ஜை பெற்றுக்கொள்ள முடியும். இந்த டர்போ இவி 1000 மினி டிரக் சிட்டி, ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் மேக்ஸ் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை ₹5,99,999, ₹8,19,999 மற்றும் ₹7,19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ₹10,000/மாதம் எனத் தொடங்கும் சுலபமான இஎம்ஐ விருப்பங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் குறைந்த முன்பணம் ₹49,999 ஆகும்.