பெட்ரோலில் கூடுதல் எத்தனால் கலப்பு: கர்நாடக அரசின் குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்தது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட 20 சதவீத அளவை விடக் கூடுதலாக எத்தனால் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அம்மாநில அரசு முன்வைத்த புகார்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் 'E20' பெட்ரோல், இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு உட்பட்டே விநியோகிக்கப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
பரிசோதனை
நடைமுறைகளில் உள்ள குளறுபடிகள்
எண்ணெய் நிறுவனங்களின் மாதிரி சேகரிப்பு விதிகளின்படி உரிய ஆய்வக நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் நிறுவனப் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை என்றும் மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட சட்ட விதிகளின்படி ஆய்வு முடிவுகள் வழங்கப்படவில்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு மேற்கொண்ட பரிசோதனை முறைகளில் போதிய வெளிப்படைத்தன்மையும் தொழில்நுட்ப துல்லியமும் இல்லை என்பதால், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசியல் சர்ச்சை
கர்நாடக ஆய்வக முடிவுகள்
முன்னதாக கர்நாடக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், பெட்ரோலில் 31.2 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
இதனை மேற்கோள் காட்டி பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிகப்படியான எத்தனால் வாகனங்களின் என்ஜின்களைப் பாழாக்குவதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் பெட்ரோல் முழுமையான தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே வழங்கப்படுவதாக மத்திய அரசு மறுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.