டெஸ்லாவின் செல்ஃப் -டிரைவிங் தொழில்நுட்பத்தைப் பற்றி விவாதிக்க சீனாவிற்கு சென்றுள்ளார் எலான் மஸ்க்
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி, எலான் மஸ்க், மின்சார வாகன நிறுவனங்களின் முக்கிய சந்தையான பெய்ஜிங்கிற்கு எதிர்பாராதவிதமாக பயணத்தை மேற்கொண்டுள்ளார். சீனாவில் டெஸ்லாவின் ஃபுல்-செல்ஃப் டிரைவிங் (FSD) மென்பொருளை அறிமுகப்படுத்துவது குறித்து சீன அதிகாரிகளுடன் உயர்மட்ட விவாதங்கள் நடத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். கூடுதலாக, டெஸ்லாவின் ஃபுல்-செல்ஃப் டிரைவிங் தொழில்நுட்பத்தை மேம்படுத்த சீனாவில் டெஸ்லா நிறுவனம் சேகரித்த தரவையும் பெறுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். இதற்காக அனுமதி பேச்சுவார்த்தைகளையும் அவர் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா தனது சீன வாகனங்களின் தரவுகளை 2021 ஆம் ஆண்டு முதல் ஷாங்காயில் சேமித்து வருகிறது. ஆனால், சீன விதிமுறைகளுக்கு இணங்க, இந்தத் தரவு இன்னும் அமெரிக்காவிற்கு அனுப்பப்படவில்லை.
FSD தொழில்நுட்பம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது
மஸ்க் இந்த பயணத்தின் போது, உள்நாட்டில் சேகரிக்கப்பட்ட இந்தத் தரவை ஏற்றுமதி செய்ய தேவையான அனுமதிகளை பெற உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். எலான் மஸ்க்கின் இந்த பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. டெஸ்லா தனது FSD தொழில்நுட்பத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. ஆனால் அது இன்னும் சீனாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. வாடிக்கையாளரின் ஆர்வம் வளர்ந்து வரும் நேரத்திலும், பிற சீன கார் உற்பத்தியாளர்கள் இதேபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டி இருந்தபோதிலும் டெஸ்லா இதை சீனாவில் அறிமுகப்படுத்தாமல் தாமதம் செய்து வருகிறது.