இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனப் பயன்பாட்டில் 0.8% மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீடுகளும், விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனினும், அரசு எதிர்பார்க்கும் அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
ஒன்று, எலெக்ட்ரிக் வாகனங்கள் எப்படி இயங்கும், அதனை பராமரிப்பது போன்ற விழிப்புணர்வு குறைவாக இருப்பது. மற்றொன்று, எலெக்ட்ரிக் வாகனக் கட்டமைப்பே இந்தியாவில் தொடக்க நிலையில் இருப்பது.
தற்போது கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 34 கோடி வாகனங்களில், 27 லட்சம் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களாகும். அதாவது, ஒட்டு மொத்த வாகனப் பயன்பாட்டில் வெறும் 0.8 சதவிகிதம் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் பொருட்டு, FAME திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கான மானியத்தையும் அரசு வழங்கி வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனம்
அதிகரிக்குமா எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு?
இந்தியாவில் டெல்லி, அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலேயே எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு சற்று அதிகமாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் ஒட்டுமொத்த வாகனப் பயன்பாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு 2%-க்கும் மேல் இருக்கிறது.
தற்போது அரசைத் தவிர்த்து பிற தனியார் நிறுவனங்களும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
மேலும், கடந்த 2020-ம் ஆண்டு வெறும் நான்கு கார் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது 13 நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.
இனி வரும் நாட்களில், மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதன் பயன்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.