மானியம் குறைக்கப்பட்டதை அடுத்து விழ்ச்சியடைந்த எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை
எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு வழங்கி வந்த மானியத்தை குறைக்கவிருப்பதாகக் கடந்த மாதம் அறிவித்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் டூவீலர்களின் மானியமும் குறைக்கப்பட்டது. சங்கிலித் தொடராக, இந்த மானியக் குறைப்பை ஈடுகட்டும் வகையில் எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது டூவீலர்கள் விலையை இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே உயர்த்தி அறிவித்து வந்தன. இதனால், இந்த மாதம் எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது. கடந்த மாதம், 1.50 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனையான நிலையில், இந்த மாதம் ஜூன் 26-ம் தேதி வரை 35,000 எலெக்ட்ரிக் டூவீலர்களே விற்பனையாகியிருக்கின்றன. ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட சில டூவீலர் நிறுவனங்களின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
விலை உயர்வும், விற்பனை வீழ்ச்சியும்:
இந்த மாதம் எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை உயர்வதையடுத்து, கடந்த மாதம் அதன் விற்பனை அதிகளவில் இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான எலெக்ட்ரிக் டூவீலர்களின் அளவை ஒப்பிடும்போதும் கிட்டத்தட்ட 40%-தத்திற்கும் மேல் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை இந்த மாதம் சரிவைச் சந்தித்திருக்கிறது. தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்களின் விலை ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை உயர்ந்திருக்கின்றன. அடுத்த 2 முதல் 4 மாதம் வரை எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில் இதே நிலையே இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்குப் பிறகே, இந்த விலையேற்றத்தை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்குவார்கள், என நிபுணர்கள் இந்த விற்பனை வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.