மழைக்காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி ஷார்ட் சர்க்யூட் ஆகுமா? EV வச்சிருக்கவங்க இந்த 3 தப்ப செஞ்சிடாதீங்க!
செய்தி முன்னோட்டம்
தற்போது ஆங்காங்கே கனமழை பெய்து வரும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் வாங்க திட்டமிட்டிருப்பவர்களிடையே ஒருவித அச்சம் உள்ளது. குறிப்பாக, தண்ணீரில் வண்டியை ஓட்டினால் பேட்டரி ஷார்ட் சர்க்யூட் ஆகுமா அல்லது கரண்ட் அடிக்குமா என்ற கேள்விகள் பரவலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர்களிடம் உள்ளன. நவீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மழைக்காலத்தில் நாம் செய்யும் சில தவறுகள் பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும். அதுகுறித்த விரிவான விபரங்களை இங்கே பார்ப்போம்.
சிறப்பம்சங்கள்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முக்கிய சிறப்பம்சங்கள்
நவீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை, அதில் உள்ள பேட்டரிகள் IP67 தரச்சான்றிதழ் (Water-proof) பெற்றவை. இருப்பினும், முழங்கால் அளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியிருக்கும் சாலையில் வண்டியை இயக்கக் கூடாது. முறையற்ற பராமரிப்பு பேட்டரி ஆயுளைக் குறைப்பதோடு நிறுவனத்தின் வாரண்டியையும் செல்லாததாக்கிவிடும்.
தரச்சான்றிதழ் விளக்கம்
IP67 ரேட்டிங் என்றால் என்ன?
தற்போது சந்தையில் இருக்கும் ஓலா, ஏத்தர், டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் பேட்டரிகள் மற்றும் மோட்டார்கள் IP67 தரச்சான்றிதழ் பெற்றவை. இதன் பொருள், வண்டியின் முக்கிய பாகங்கள் தூசி மற்றும் தண்ணீர் புகாதவாறு முழுமையாக சீல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, 1 மீட்டர் ஆழமுள்ள தண்ணீரில் 30 நிமிடங்கள் வரை இந்த பாகங்கள் மூழ்கி இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, சாதாரண மழையில் வண்டியை ஓட்டுவதாலோ அல்லது வண்டியை நிறுத்தி வைப்பதாலோ எந்த ஆபத்தும் நேராது.
தவிர்க்க வேண்டியவை
வாட்டர் பிரஷர் வாஷ் செய்வது
மழைக்காலத்தில் வண்டியில் சேறு மற்றும் சகதி ஒட்டுவது சகஜம். அதைச் சுத்தம் செய்யும்போது, கார்டன் ஹோஸ் (Garden hose) அல்லது வாட்டர் சர்வீஸ் நிலையங்களில் உள்ள அதிக அழுத்தமுள்ள பிரஷர் வாஷ் முறையைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான தண்ணீர் அழுத்தம், பேட்டரியின் சீல் வைக்கப்பட்ட பகுதிகளைத் தாண்டி உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. வண்டியை சாதாரண தண்ணீரில் நனைத்த துணியைக் கொண்டு துடைப்பதே பாதுகாப்பானது.
தவிர்க்க வேண்டியவை
ஈரப்பதத்துடன் சார்ஜ் போடுவது
மழையில் வண்டியை ஓட்டிவிட்டு வந்த உடனே சார்ஜ் போடுவதைத் தவிர்க்கவும். வண்டியின் சீட்டுக்கு அடியில் அல்லது முன்பக்கம் இருக்கும் சார்ஜிங் போர்ட்டில் ஈரம் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். ஈரம் இருந்தால், உலர்ந்த துணியால் துடைத்த பின்பு, பாதுகாப்பான நிழலான கூரைக்கு அடியில் மட்டுமே சார்ஜ் போட வேண்டும். ஈரப்பதத்துடன் சார்ஜ் போடுவது சாக்கெட் மற்றும் சார்ஜரை சேதப்படுத்தலாம்.
தவிர்க்க வேண்டியவை
வெள்ள நீரில் வண்டியை இயக்குவது
நிறுவனங்கள் IP67 ரேட்டிங் கொடுத்திருந்தாலும், வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வண்டியை நீண்ட நேரம் நிறுத்தி வைக்கக் கூடாது. அதே போல், மோட்டார் மற்றும் ஹப் முழுமையாக மூழ்கும் அளவிற்கு சாலையில் தொடர்ந்து இயக்கக் கூடாது. இது 'Customer Negligence' (வாடிக்கையாளரின் அஜாக்கிரதை) என்ற பிரிவின் கீழ் வரும் என்பதால், ஒருவேளை பேட்டரி பழுதானால் நிறுவனத்தின் வாரண்டி கிடைக்காது. சொந்தக் காசை செலவழித்துத்தான் மாற்ற வேண்டி வரும்.