E20 பெட்ரோல் சர்ச்சை; E10 பெட்ரோலை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டம் எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்பாடு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த E20 பெட்ரோலால் பழைய வாகனங்களின் எஞ்சின் பாகங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகனங்களின் மைலேஜ் 2 முதல் 6 சதவீதம் வரை குறைவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் 10 சதவீதம் எத்தனால் மட்டுமே கலக்கப்பட்ட பழைய E10 பெட்ரோலை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது.
மீண்டும் அறிமுகம்
பிரீமியம் பெட்ரோல் மூலம் E10 பெட்ரோலை மீண்டும் அறிமுகம் செய்ய திட்டம்
பொதுமக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து, XP95, ஸ்பீட் மற்றும் பவர்95 போன்ற ஹை-ஆக்டேன் பிரீமியம் பெட்ரோல் வகைகளில் E10 கலவையை மீண்டும் விற்பனை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதற்காக புதிய சேமிப்புக் கிடங்குகளையோ அல்லது தனி பம்புகளையோ அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலிய அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் மூலம் பழைய வாகன உரிமையாளர்கள் தங்களுக்குப் பொருத்தமான எரிபொருளைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.
விளக்கம்
நாடாளுமன்றத்தில் நிதின் கட்கரி அளித்த விளக்கம்
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் வகை மற்றும் மாடலைப் பொறுத்து 2% முதல் 6% வரை மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், எஞ்சின் ஆயுள் குறித்த சோதனைகளில் E20 பெட்ரோலால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இது வழக்கமான பெட்ரோலை விட 30% குறைவான கார்பன் உமிழ்வையே வெளிப்படுத்துகிறது என்றும் விளக்கமளித்தார்.
தற்பொழுது பெரும்பாலான வாகன ஓட்டிகள் பிரீமியம் பெட்ரோலுக்கு மாறி வருகின்றனர்.
சிக்கல்கள்
தனித்தனி எரிபொருள் நிலையங்களை அமைப்பதில் உள்ள சிக்கல்கள்
ஒரே பெட்ரோல் பங்கில் தூய்மையான பெட்ரோல், E10 மற்றும் E20 ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் விற்பனை செய்வது மிகப்பெரிய விநியோக சவாலை ஏற்படுத்தும் என அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 'ஆக்டேன் 95' விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி E10 பெட்ரோலை எளிதாக விற்பனை செய்ய முடியும் என பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப எரிபொருளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசு வழங்க வேண்டும் என்பதே வாகன உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.