2028 முதல் எலக்ட்ரிக் டூ-வீலர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்; டெல்லி அரசின் புதிய வாகனக் கொள்கை
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு மின்சார வாகனக் கொள்கை 2026-2030 வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் இவி பிரிவால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பெட்ரோல் வாகனங்களுக்குக் கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான அம்சமாக, ஏப்ரல் 1, 2028 முதல் டெல்லியில் புதிய பெட்ரோல் இரு சக்கர வாகனங்களை பதிவு செய்யத் தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அன்றிலிருந்து மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.
காலக்கெடு
முக்கிய வாகனங்களுக்கான காலக்கெடு
பெட்ரோல் பைக்குகள் மட்டுமல்லாமல், மற்ற வாகனங்களுக்கும் தனித்தனி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: மூன்று சக்கர வாகனங்கள்: ஜனவரி 1, 2027 முதல் புதிய எலக்ட்ரிக் ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். வணிக ரீதியான வாகனங்கள்: ஆன்லைன் டெலிவரி மற்றும் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் ஜனவரி 1, 2026 முதல் புதிய பெட்ரோல்/டீசல் வாகனங்களை வாங்கத் தடை விதிக்கப்படும். பள்ளிப் பேருந்துகள்: பள்ளிப் பேருந்துகளைப் படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030-க்குள் 30% பள்ளிப் பேருந்துகள் மின்சார மயமாக மாற்றப்படும். அரசு வாகனங்கள்: இனி அரசுத் துறைகளுக்கு வாங்கப்படும் அனைத்து புதிய வாகனங்களும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்கும்.
மானியம்
மானியம் மற்றும் சலுகைகள்
மின்சார வாகனங்களுக்கு மக்களை மாற்ற ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன: நிதியுதவி: ரூ.2.25 லட்சம் வரையிலான எலக்ட்ரிக் பைக்குகளுக்குப் பேட்டரி திறனைப் பொறுத்து மானியம் வழங்கப்படும். எலக்ட்ரிக் கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கும். வரி விலக்கு: தகுதியுள்ள மின்சார வாகனங்களுக்குப் பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி ஆகியவற்றிலிருந்து 100% விலக்கு அளிக்கப்படும். பழைய வாகனங்களுக்கு ஸ்கிராப்பேஜ் சலுகை: பழைய பிஎஸ்-4 மற்றும் அதற்கு முந்தைய வாகனங்களை அழிப்பவர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
உள்கட்டமைப்பு
சார்ஜிங் கட்டமைப்பு மற்றும் பேட்டரி மேலாண்மை
டெல்லி முழுவதும் சார்ஜிங் நிலையங்களை அமைக்க டெல்லி டிரான்ஸ்கோ லிமிடெட் நோடல் ஏஜென்சியாக செயல்படும். சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலம் விரைவாக அனுமதி வழங்கவும், டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் மூலம் இதனை நிர்வகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை முறையாக மறுசுழற்சி செய்யவும், பாதுகாப்பாக அகற்றவும் புதிய விதிகள் கொண்டு வரப்படுகின்றன. இதற்காகத் தனி 'இவி நிதி' உருவாக்கப்பட்டு, சுற்றுச்சூழல் வரி மற்றும் மாநில பட்ஜெட் மூலம் நிதி ஒதுக்கப்படும்.