2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள்
சிவில் விமான நிறுவனங்களான, ஏர் இந்தியாவின் விரிவாக்கம் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள், இண்டிகோவின் பரந்த-உடல் விமானங்களில் கவனம் செலுத்துதல், ஜெட் ஏர்வேஸின் எதிர்கால விமானப் பாதை ஆகியவை, விமானத்துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதிக உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் விமான நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களால், நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, V- வடிவ மீட்புப் பாதையில் உறுதியாக உள்ளது என்று விமானத்துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். ஆனால், அங்கங்கே மீண்டும் பரவத் தொடங்கியிருக்கும் கோவிட்தொற்று, விமானக் கூறுகளின் பற்றாக்குறை மற்றும் அரசியல் மாற்றங்கள், இந்த மீட்பு பாதையில் சில இன்னல்களை ஏற்படுத்தக்கூடும். எனினும், இந்திய விமான துறை, தனது தரத்தை உயர்த்தவும், பயணிகளை கவரவும், பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய விமான போக்குவரத்துத் துறை எதிர்காலம்
அதன் ஒரு பகுதியாக, கோவா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டு, விமான நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாட்டில், 146 செயல்பாட்டு விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் நீர் ஏரோட்ரோம்கள் உள்ளன. அதை மேம்படுத்தி, குறைந்தது 200 செயல்பாட்டு விமான நிலையங்களை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என, சமீபத்தில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் (ஐசிஏஓ) தரவரிசையின்படி, இந்தியா இப்போது 48 வது இடத்தில் உள்ளது. 2018 இல், 102 வது இடத்தில் இருந்து, இப்போது முன்னேறியுள்ளது ஒரு பெரிய மையில்கல். IATA தலைவர் வில்லி வால்ஷ் கூறுகையில், மற்ற ஆசிய நாடுகளை விட, இந்தியா வலுவான மீட்சி பாதையில் செல்கிறது என குறிப்பிட்டார்.