ஸ்லீப்பர் கோச் பேருந்து தயாரிப்பில் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆறு மாதங்களில் நிகழ்ந்த கோரமான தீ விபத்துகளில் 145 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஸ்லீப்பர் கோச் (Sleeper Coach) பேருந்துகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு அதிரடியாகக் கடுமையாக்கியுள்ளது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய விதிகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். புதிய விதிகளின்படி, இனி ஸ்லீப்பர் பேருந்துகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டுமே உருவாக்க முடியும். உள்ளூர் மற்றும் அங்கீகரிக்கப்படாத தனிநபர் பாடி பில்டர்கள் (Body Builders) இனி ஸ்லீப்பர் பேருந்துகளை உருவாக்க அனுமதி இல்லை.
விவரங்கள்
கட்டாயமாக்கப்பட பாதுகாப்பு அம்சங்கள்
செப்டம்பர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ள திருத்தப்பட்ட 'பேருந்து கட்டுமானக் குறியீடு' (AIS-052) மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி அனைத்துப் பேருந்துகளும் அமைய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய விபத்துகளில் பேருந்துகளின் உட்புறங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டதும், அவசர கால வழிகள் அடைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இதனைத் தவிர்க்க, தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து ஸ்லீப்பர் பேருந்துகளிலும் தீயைக் கண்டறியும் கருவிகள் (Fire Detection Systems), அவசர கால விளக்குகள், டிரைவர்கள் தூங்குவதைக் கண்டறியும் தொழில்நுட்பம் (ADAS), அவசரக் கால ஜன்னல்கள் மற்றும் சுத்தியல்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை உடனடியாகப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.