செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் சந்தையை ஒழுங்குபடுத்த, டீலர்களுக்கான புதிய விதிகள் அமல்
செகண்ட் ஹேண்ட் வாகனங்கள், குறிப்பாக கார்/பைக் சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிகளை, மத்திய அரசு அமல்படுத்த போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வணிகம் செய்வதை எளிதாக்கவும், சில்லறை விற்பனையாளர்கள் மூலம், பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனை மற்றும் வாங்குதலில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், இந்த புதிய விதி என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சமீபகாலமாக, செகண்ட் ஹேண்ட் வாகனங்களின் சந்தை, இந்தியாவில் விரிவடைந்து வருகிறது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் வர்த்தகமும், இதற்கு ஒரு முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது. "தற்போதைய சுற்றுச்சூழலில், வாகனத்தை அடுத்தடுத்த உரிமையாளருக்கு மாற்றும் போது பல சிக்கல்கள், மூன்றாம் தரப்பு சேத பொறுப்புகள் தொடர்பான சர்ச்சைகள், மற்றும் விலையை நிர்ணயிப்பதில் சிரமம் ஏற்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செகண்ட் ஹேண்ட் வாகனங்கள்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிகளின் கீழ், ஒரு டீலரின் நம்பகத்தன்மையை அடையாளம் காண பதிவு செய்யப்பட்ட அங்கீகார சான்றிதழ் அவசியம். உரிமையாளருக்கும், டீலருக்கும் இடையில் வாகனத்தை டெலிவரி செய்வதற்கான நடைமுறையும் விவரிக்கப்பட்டுள்ளது. டீலர்கள், தங்கள் வசம் உள்ள மோட்டார் வாகனங்களின் பதிவுச் சான்றிதழை புதுப்பித்தல், தகுதிச் சான்றிதழை புதுப்பித்தல், நகல் பதிவுச் சான்றிதழ், தடையில்லாச் சான்றிதழ், மற்றும் உரிமம் மாற்றுதல் ஆகியவற்றுக்கு தாங்களே விண்ணப்பிக்க, அதிகாரம் பெறுகின்றனர். ஒழுங்குமுறை நடவடிக்கையாக, மின்னணு வாகனப் பயணப் பதிவேட்டைப் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதில் பயணத்தின் நோக்கம், ஓட்டுநர், நேரம் போன்ற விவரங்கள் பதிவேற்றப்பட வேண்டும். இதன் மூலம் மோசடி இடைத்தரகர்களையும், போலி டீலர்களையும் களையலாம், என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.