இசைப் பிரியர்களுக்கு கரோக்கே வசதியை தங்கள் கார்களில் அளிக்கத் திட்டமிட்டிருக்கும் BYD
சீனாவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான BYD (Build Your Dreams), இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் தங்களுடைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் 'அட்டோ 3' மற்றும் 'e6' என இரண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், புதிதாக இரண்டு கார் மாடல்களின் பெயர்களையும் இந்தியாவில் பதிவு செய்திருக்கிறது. தற்போது, இந்நிறுவனம் தங்களது கார் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த, கரோக் செயலி ஒன்றை தங்கள் எலெக்ட்ரிக் கார்களின் வழங்கவிருக்கிறது. இந்த வசதியை வழங்குவதற்காக, ஸ்டிங்ரே என்ற நிறுவனத்துடனும் கூட்டணி அமைத்திருக்கிறது BYD. இந்தப் புதிய வசதியின் அறிமுகமானது, தங்கள் வாடிக்கையாளர்களின் இசை அனுபவத்தை புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
எதற்காக இந்தப் புதிய கரோக் வசதி?
கரோக் என்பது நமக்கு பிடித்த பாடலின் இசை மட்டும் பின்னணியில் ஒளிக்க, அந்தப் பாடலை நாம் பாட அனுமதிக்கும் வகையிலான ஒரு வசதியாகும். இதற்கான செயலியை தங்களது கார்களில் வழங்குவதன் மூலம், குறிப்பிட்ட பாடலினைத் தேர்ந்தெடுத்து, அதனை காரிலேயே நாம் பாடி மகிழ முடியும். மேலும், சர்வதேசப் பாடல்கள் தொடங்கி பிராந்திய மொழிப் பாடல்கள் வரை அனைத்து வகையான இசையையும் தங்களுடைய புதிய கரோக்கே வசதியின் மூலம் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது BYD. இந்த வசதியானது, பாதுகாப்புக் குறைபாடாக மாறிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது அந்நிறுவனம். எனவே, கார் இயக்கத்தில் இருக்கும் போது இந்த வசதியைப் பயன்படுத்த முடியாத வகையில், இதனை வடிவமைத்திருக்கிறது BYD.