15 நிமிடங்களில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை சாத்தியப்படுத்திய பெங்களூரு ஸ்டார்ட்அப்
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதற்கு தடையாக இருப்பது எலெக்ட்ரிக் வாகனக் கட்டமைப்பு குறைவாக இருப்பது தான். மேலும், ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தேவைப்படுகிறது. இது எரிபொருள் வாகனங்களுடன் ஒப்பிடும் போது மிக மிக அதிகம். பிராக்டிகலாக, இது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்புடையாக இல்லாமல் இருந்து வருவது தான், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டிற்கு பெரும் தடையாக இருக்கிறது. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த எக்ஸ்போனென்ட் எனர்ஜி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் வகையிலான தங்களது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், கடந்த மூன்று மாதங்களாக இந்தத் தொழில்நுட்பத்தை தினசரி பயன்பாட்டிலும் பயன்படுத்திக் காட்டியிருக்கிறது அந்நிறுவனம்.
15 நிமிடத்தில் முழுமையான சார்ஜ்:
பேட்டரி பேக், சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் சார்ஜிங் கனெக்டர் ஆகியவை அனைத்தையும் ஒன்றுக்கு ஒன்று ஏற்ப உருவாக்கி இந்த 15 நிமிட சார்ஜிங்கை சாத்தியப்படுத்தியிருக்கிறது எக்ஸ்போனென்ட் எனர்ஜி. இந்நிறுவனத்தின் பேட்டரியைக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது பெங்களூருவில் இயங்கி வருகின்றன. மேலும், பெங்களூருவில் 30-க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்களையும் அந்நிறுவனம் அமைத்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில், கிட்டதட்ட 25,000 முறைக்கும் மேல் 15 நிமிடங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை முழுமையாக சார்ஜ் செய்திருக்கிறது அந்நிறுவனம். தற்போது பெங்களூருவில் மட்டும் இயங்கி வரும் இந்நிறுவனம், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மும்பை, டெல்லி மற்றும் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் தங்கள் சேவையை வழங்கத் திட்டமிட்டு வருகிறது.