ரூ.4.59 கோடி விலையில் இந்தியாவில் வெளியானது ஆஸ்டன் மார்டின் DB12 சொகுசு கார்
இந்தியாவில் தங்களுடைய விலைமதிப்புமிக்க 'DB12' சூப்பர் டூரர் மாடலை வெளியிட்டிருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்டன் மார்டின். நான்கு மாதங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் இந்தக் காரை அந்நிறுவனம் வெளியிட்டது. தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது ஆஸ்டன் மார்டின் DB12. DB11-ன் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த DB12 மாடலை உருவாக்கியிருக்கிறது ஆஸ்டன் மார்டின். புதிய DB12 மாடலில் உட்பக்கத்தை முழுமையாக மறுவடிவமைப்பு செய்திருக்கிறது ஆஸ்டன் மார்டின். புதிய பிஸ்போக், டச்ஸ்கிரீன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை புதிய DB12ல் கொடுத்திருக்கிறது ஆஸ்டன் மார்டின்.
ஆஸ்டன் மார்டின் DB12: இன்ஜின் மற்றும் விலை
இந்த ஆஸ்டன் மார்டின் DB12ல், மெர்சிடீஸ் AMG கார் மாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4.0 லிட்டர், ட்வின் டர்போ V8 இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். 670hp பவர் மற்றும் 800Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது இந்த இன்ஜின். 8 ஸ்பீடு ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பெற்றிருக்கும் இந்த DB12 ஆனது, 0-100 கிமீ வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது. மேலும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கிமீ. இந்தியாவில் இந்தப் புதிய சூப்பர் டூரர் மாடலை ரூ.4.59 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ஆஸ்டன் மார்டின்.