Loading...
சுங்கச்சாவடிகளில் இனி நிற்க வேண்டியதில்லை! மார்ச் 2027க்குள் வரப்போகும் புதிய மாற்றம்; நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு
மார்ச் 2027-க்குள் சுங்கச்சாவடிகளில் தடையில்லாப் பயணம்

சுங்கச்சாவடிகளில் இனி நிற்க வேண்டியதில்லை! மார்ச் 2027க்குள் வரப்போகும் புதிய மாற்றம்; நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 13, 2026
04:43 pm

செய்தி முன்னோட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் மார்ச் 2027க்குள் தடையில்லா சுங்கச்சாவடிகளாக மாற்றப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அறிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற உலகளாவிய ஃபின்டெக் மாநாட்டில் (Global Fintech Fest) பேசிய அவர், இந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீத சுங்கச்சாவடிகள் தடையில்லா அமைப்பாக மாற்றப்படும் என்றும், வரும் மார்ச் மாதத்திற்குள் இது 100 சதவீதத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் பயணிக்க முடியும்.

கூடுதல் வருமானம்

அரசுக்கு ரூ.25,000 கோடி கூடுதல் வருமானம்

ஃபாஸ்டேக் மின்னணு சுங்கக் கட்டண முறை முழுமையாக செயல்படும் போது, இந்திய அரசிற்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரை கூடுதல் நிதிப் பலன் கிடைக்கும் என்று அமைச்சர் கட்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஃபாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சுங்கக் கட்டண வருவாய் 10 சதவீதம் உயர்ந்து ரூ.82,000 கோடியைக் கடந்துள்ளது.

தற்போது சோதனை முறையில் இயக்கப்படும் தடையில்லாச் சுங்கச்சாவடி முறை மூலம் மேலும் ரூ.7,000 கோடி முதல் ரூ.8,000 கோடி வரை வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் இயக்க செலவு 12 சதவீதத்தில் இருந்து 2-3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நன்மைகள்

எரிபொருள் சேமிப்பும் வாகன ஓட்டிகளுக்கான பலன்களும்

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படுவதால், நேர விரயம் குறைவதோடு வாகன ஓட்டிகளுக்குப் பெருமளவில் எரிபொருள் சேமிக்கப்படுகிறது.

ஆய்வுகளின்படி, சுங்கச்சாவடிகளில் தாமதம் தவிர்க்கப்படுவதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் ரூ.5,250 கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் பங்கேற்ற தொழில்நுட்ப வல்லுநர்களிடம் பேசிய கட்கரி, சரக்கு லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகச் சரக்குகளை ஏற்றிச் செல்வதைக் கண்டறியும் புதிய தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் நாட்டின் சரக்குக் போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ADVERTISEMENT