AC vs DC சார்ஜிங், எதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது?
எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்களிடையே ஊடுறுவத் தொடங்கியிருக்கும் நிலையில், அதன் பயன்பாடு குறித்த சந்தேகமும் நிறைய பேருக்கு எழுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தாத அல்லது வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் நம்மில் பலருக்கும் கூட இந்த சந்தேகம் எழுந்திருக்கும். அதாவது, ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் நமது எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் கார பேட்டரியின் ஆயுட்காலம் குறையுமா? இது ஒவ்வொரு வாகனத்தைப் பொருத்து, அதன் பேட்டரி தயாரிப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கும் சார்ஜக் ஆகியவற்றைப் பொருத்து மாறும். உதாரணத்திற்கு சிட்ரன் நிறுவனம் DC ஃபாஸ்ட் சார்ஜர்களைப் பயன்படுத்தி தங்களுடைய eC3-யை தினமும் கூட சார்ஜ் செய்யலாம் எனத் தெரிவித்திருக்கிறது. அப்படியென்றால், அதற்கேற்ற வகையிலான பேட்டரியை அந்நிறுவனம் அளித்திருக்கிறது என்று பொருள்.
எந்த வகை சார்ஜிங் பெஸ்ட், DC அல்லது AC?
ஆனால், பொதுவாக தினசரி பயன்பாட்டிற்கு AC சார்ஜர்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஃபாஸ்ட் சார்ஜிங்கை பயன்படுத்தும் போது பேட்டரி சூடாகும். அப்படி ஆகும் போது பேட்டரிக்களின் ஆயுட் காலம் கொஞ்சம் குறையும். அதற்காக ஃபாஸ்ட் சார்ஜிங்கை பயன்படுத்தவே கூடாது என்றில்லை. நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது, வழியில் இருக்கும் DC சார்ஜிங்கை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தினமும் அதனைப் பயன்படுத்தக் கூடாது, அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், தொடர்ந்து இரு முறை ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்ய நேர்ந்தால், அதன் பிறகு சார்ஜ் செய்யும் போது, AC சார்ஜிங்கில் 100% வரை சார்ஜ் செய்வது பேட்டரிக்கு நல்லது.