ரூ.13.89 லட்சம் விலையில் புது மாடல்! 2027 கவாஸாகி வெர்சிஸ் 1100 இந்தியாவில் அறிமுகம்; என்னென்ன மாற்றங்கள்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் இயங்கி வரும் கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம் தனது 2027 ஆம் ஆண்டுக்கான வெர்சிஸ் 1100 அட்வென்ச்சர் ரக பைக்கை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 13.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டு அறிமுகமான முந்தைய மாடலின் விலையை விட சுமார் ரூபாய் 99,000 அதிகமாகும். பல புதிய அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடம்பர அட்வென்ச்சர் பைக்குகளுக்கான விநியோகப் பணிகள் செப்டம்பர் மாதம் பாதியில் இருந்து நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளன.
செயல்திறன்
எஞ்சின் திறன் மற்றும் மெக்கானிக்கல் அமைப்புகள்
இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கில் மிகவும் சக்திவாய்ந்த 1,099சிசி லிக்விட்-கூல்டு இன்லைன்-ஃபோர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் 135 பிஎஸ் ஆற்றலையும் 112 என்எம் டார்க் திறனையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்களை மிகவும் எளிதாக்கும் வகையில் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்புறத்தில் 43மிமீ அப்சைடு-டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் பேக்-லிங்க் ஷாக் அப்சார்பர் அமைப்பும் வழங்கப்பட்டு உங்கள் நீண்ட தூரப் பயணச் சவாரியை மிகவும் சொகுசானதாக மாற்றுகின்றன.
தொழிலநுட்பங்கள்
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள்
2027 ஆம் ஆண்டு மாடலில் ரைடர்களின் நீண்ட தூரப் பயண வசதிக்காகப் பல நவீன மின்னணு மாற்றங்கள் புதிதாக செய்யப்பட்டுள்ளன.
ஹேண்டில்பாரில் புதிய யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் எலக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல் வசதிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், வளைவுகளில் பாதுகாப்பாகச் செல்ல உதவும் நவீன கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், அதிவேகமாக கியர் மாற்ற உதவும் க்விக்ஷிஃப்டர் வசதி கூடுதல் கட்டணத்தில் விருப்பப் பொருளாகவே தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.
போட்டி
சந்தை போட்டியாளர்கள் மற்றும் நிறங்கள்
இந்த பைக் இந்திய சந்தையில் ஒரே ஒரு மாடலாக, மெட்டாலிக் மேட் கிராபீன் ஸ்டீல் கிரே மற்றும் மெட்டாலிக் டயப்லோ பிளாக் ஆகிய இருவண்ணக் கலவையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது.
சுமார் 257 கிலோ எடையும் 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட எரிபொருள் டேக்கும் கொண்டுள்ள இந்த பைக் சிறந்த மைலேஜ் தரும்.
இந்தியாவின் பிரீமியம் அட்வென்ச்சர் பிரிவில் டிரையம்ப் டைகர் 900 ஜிடி மற்றும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி2 ஆகிய முன்னணி பைக்குகளுக்கு இது கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.