
உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே
செய்தி முன்னோட்டம்
புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கேவின் வருடாந்திர துயரக் குறியீட்டின்(HAMI) அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்படும்.
அதன் அடிப்படையில், இந்த வருடம் மிகவும் பரிதாபகரமான நாடாக ஜிம்பாப்வே உருவெடுத்துள்ளது.
உக்ரைன், சிரியா மற்றும் சூடான் போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளை விஞ்சியுள்ள ஜிம்பாப்வே , கடந்த ஆண்டு 243.8 சதவீதத்தை தாண்டிய பணவீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை தயாரிக்க மொத்தம் 157 நாடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் கூறியுள்ளது.
"அதிகமான பணவீக்கம், அதிக வேலையின்மை, அதிக கடன் விகிதங்கள், GDP வளர்ச்சி குறைவு ஆகியவற்றால் ஜிம்பாப்வே உலகின் மிகவும் பரிதாபகரமான நாடாக உள்ளது.'' என்று ஸ்டீவ் ஹான்கே ட்வீட் செய்துள்ளார்.
details
இந்தியா மற்றும் அமெரிக்கா வேலைவாய்ப்பின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
ஜிம்பாப்வே நாட்டை ஆளும் அரசியல் கட்சியான ZANU-PF மற்றும் அதன் கொள்கைகள் "பெரிய துயரத்தை" ஏற்படுத்தி உள்ளதாகவும் ஹான்கே குற்றம் சாட்டினார்.
வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா ஆகிய நாடுகள் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியலில் முதல் 15 இடத்தை பிடித்துள்ளது.
இதில் இந்தியா 103வது இடத்தையும், அமெரிக்கா 134வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதாவது, உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக சுவிட்சர்லாந்து உள்ளது.
அதை தொடர்ந்து, குவைத், அயர்லாந்து, ஜப்பான், மலேசியா, தைவான், நைஜர், தாய்லாந்து, டோகோ மற்றும் மால்டா ஆகியவை மிகவும் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.