உலகின் மிக வயதான நபர் 118 வயதில் உயிரிழந்தார்
உலகின் மிக வயதான நபர் என்று கின்னஸில் இடம்பிடித்த பிரெஞ்சு கன்னியாஸ்திரி லுசைல் ராண்டன் தனது 118வது வயதில் காலமானார். சிஸ்டர் ஆண்ட்ரே என்று அழைக்கப்படும் ராண்டன், முதல் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு 10 வருடங்களுக்கு முன், பிப்ரவரி 11, 1904 அன்று தெற்கு பிரான்சில் பிறந்தார். இவர் டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் தூங்கி கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார் என்று ஏஜென்ஸ்-பிரான்ஸ்-பிரஸ் நேற்று(ஜன:17) தெரிவித்திருக்கிறது. "மிகப்பெரும் சோகம் இருக்கிறது, ஆனால்... அவருடைய அன்புக்குரிய சகோதரனுடன் சேர வேண்டும் என்பது தான் அவரது ஆசை. அவருக்கு அதுதான் விடுதலை" என்று செயின்ட்-கேத்தரின்-லேபர் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தவெல்லா கூறி இருக்கிறார். பிரார்த்தனை செய்வது, விருந்தாளிகளை சந்திப்பது மட்டுமே இவரது வழக்கமாக இருந்திருக்கிறது.
கின்னஸ் சாதனைகள்
119 வயது வரை வாழ்ந்த ஜப்பானியப் பெண்ணான கேன் டனாகோவின் மரணத்திற்குப் பிறகு, ஏப்ரல் 2022 இல் 118 வயதான ரேண்டனை மிக வயதான நபராக 'கின்னஸ்' அறிவித்தது. இவர் 2021ஆம் ஆண்டில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் என்பதால், கோவிட்-19 உயிர் பிழைத்தவர்களில் மிகவும் வயதானவர் என்ற பெயரை பெற்றார். இவர் 108 வயது வரை அயராமல் உழைத்தவர். இவருடைய நீண்ட ஆயுளுக்கான காரணத்தை கேட்ட போது, "தினமும் ஒரு சிறிய கிளாஸ் ஒயின்" குடிக்கும் பழக்கமே அதற்கு காரணம் என்று சென்ற வருடம் இவர் பதிலளித்திருந்தார்.