
பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள அதிகாரிகள் சர்வதேச மகளிர் தின பேரணிக்கு அனுமதி தர மறுத்துள்ளனர்.
பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று பாகிஸ்தானில் இரண்டு வெவ்வேறு குழுக்களால் பேரணிகள் நடத்தப்படும்.
பெண் உரிமை குழுக்களால் நடத்தப்படும் பேரணிகள் மனித உரிமை கோரிய பேரணிகளாக இருக்கும்.
மற்றொரு பேரணி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மதக்குழுக்களால் செய்யப்படும் 'ஹயா'(அடக்கம்) எனப் பெயரிடப்பட்ட எதிர்ப்பு பேரணிகளாகும்.
மகளிர் தின பேரணியில் வைக்கப்பட்டிருக்கும் "சர்ச்சைக்குரிய பேனர்கள் மற்றும் பாதுகாப்புக் கவலைகளை" மேற்கோளிட்டு பெண்ணுரிமை பேரணிகளுக்கு லாகூர் நகர அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், மகளிர் தின எதிர்ப்பு பேரணிகளுக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான்
அடிப்படை உரிமைகளுக்காக போராடும் பெண்கள்
"இது ஒரு உரிமை மீறல். இது இரு குழுக்களுக்கும் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையை நிர்வகிக்கும் மாநிலத்தின் திறனைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது." என்று லாகூர் பெண்ணுரிமை பேரணியின் தலைவர் ஹிபா-அக்பர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு ஆதரவாக பேரணி செய்யும் குழுக்கள் அடிக்கடி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதால்,அவர்கள் நீதிமன்றத்தை அடிக்கடி நாடவேண்டிய நிலை பாகிஸ்தானில் நிலவி வருகிறது.
பெண்ணுரிமை கோருபவர்கள் மேற்கத்திய பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்றனர் என்றும் அவர்கள் கலாச்சார உணர்வுகளை அவமதிப்பதாகவும் அவர்கள் மீது தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது.
மதத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்டுதோறும் பாகிஸ்தானில் ஆணவ கொலை செய்யப்படுகின்றனர்.
பாகிஸ்தானில் அடிப்படை உரிமைகளுக்காக பெண்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அங்குள்ள ஆண்கள் தங்களுக்கு எதிராக பல வன்முறைகளை செய்கிறார்கள் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.