104 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பெண், மீட்கப்பட்ட 1 நாளில் உயிரிழந்தார்
தெற்கு துருக்கியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் இன்று(பிப் 11) மருத்துவமனையில் உயிரிழந்தார். தெற்கு துருக்கியில் உள்ள கிரிகான் நகரில் 40 வயதுடைய ஜெய்னெப் கஹ்ராமனை ஜெர்மனியின் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து நேற்று(பிப் 10) மீட்டனர். அந்த பெண் உயிர் பிழைத்ததை "அதிசயம்" என்றே மீட்பு படையினர் கூறினர். ஏனென்றால் இடிபாடுகளைத் தோண்ட தோண்ட அவர்களுக்கு நிறைய உடல்கள் தான் கிடைத்ததே தவிர அதில் உயிரோடு இருப்பவர்களை காண்பது அரிதாக இருந்தது. அவரை காப்பாற்றிய ஒரே நாளில் அவர் உயிரிழந்தது மிகவும் சோகத்தை அளிக்கிறது என்கின்றனர் அவரை மீட்ட ஜெர்மனிய மீட்பு படையினர்.
மீட்கப்பட்ட ஒரே நாளில் உயிரிழந்தார்
"ஜெய்னெப் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் உயிரிழந்ததை சகோதர சகோதரிகளிடமிருந்து இப்போதுதான் அறிந்தோம்." என்று கூறிய ஜெர்மன் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் ஸ்டீவன் பேயர், "அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டார் என்பதை நாங்கள் குழுவிடம் தெரிவித்துள்ளோம். அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கிறது." என்று தெரிவித்தார். சில மீட்புப் பணியாளர்கள், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக் கொண்டதாக NDTV தெரிவித்திருக்கிறது. திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்புப் பணியாளர்கள் வந்ததாக கஹ்ராமனின் குடும்பத்தினர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்திருக்கின்றனர். இடிபாடுகளுக்குள் ஆழமாக சிக்கி இருந்தபோதே ஜெர்மன் மீட்பு படையினர் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டு, அவருக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுத்து பல மணிநேரம் போராடி அவரை மீட்டு காப்பாற்றி இருக்கின்றனர்.