ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மிகப்பெரும் தவறு: ஜோ பைடன்
ரஷ்யா அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மிகப்பெரும் தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 21ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இதை செய்தது மிகப்பெரும் தவறு. இது ஒரு பொறுப்பில்லாத முடிவு. ஆனாலும், அவர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நினைக்கிறார் என்று எனக்கு தோன்றவில்லை" என்று கூறியுள்ளார். ரஷ்ய-உக்ரைன் போரில், அமெரிக்கா பெரிய அளவில் உக்ரைனுக்கு உதவி கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் உக்ரைனுக்கு நேரில் சென்று தன் ஒத்துழைப்பை உறுதிபடுத்தினர்.
அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் குறித்த விவரங்கள்
இதனையடுத்து, அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியது. புதிய START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் என்பது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். 2010இல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக்-ஒபாமா மற்றும் அப்போதைய ரஷ்ய அதிபர் டிமிட்ரி-மெட்வெடேவ் ஆகியோரால் புதிய START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த புதிய START ஒப்பந்தம் அமெரிக்காவும் ரஷ்யாவும் பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை வரம்பிற்குள் கொண்டு வருகிறது. அதாவது, இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது.