ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா?
ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த வாரம் அந்நாட்டு அரசு விசா நடைமுறைகளில் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. வேலை தொடர்பான விசா பெற, ஊதியத்தை இரண்டு மடங்கு வரை அதிகரித்த அந்நாட்டு அரசு, சுகாதார சேவைகளில் பணிபுரிபவர்கள், தங்களது விசாவில் குடும்பத்தினரை பிரிட்டனுக்குள் அழைத்து வர தடை விதித்தது. அதேபோல், ஜனவரி 2024 முதல், ஆராய்ச்சி அல்லாத படிப்புகளில் சேரும் வெளிநாட்டு முதுகலை மாணவர்கள், இனி குடும்ப உறுப்பினர்களை ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு (யுகே) அழைத்து வர முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அங்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களை எந்த வகையில் பாதிக்கும் என்பதை, சற்று விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2024 ஜனவரி அமலாகும் புதிய விதிகள் யுகே செல்லும் மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்?
இந்தக் கொள்கை மாற்றம், இந்தியாவில் இருந்து யுகேவிற்கு மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களை, தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கலாம். சார்ந்திருப்பவர்களைக்(Dependents) அழைத்து வர முடியாதது, இங்கிலாந்தை மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான இடமாகக் கருதுவதை தடுக்கலாம். இருப்பினும், மற்ற உலக நாடுகள் போல் அல்லாமல் யுகேவில் பெரும்பான்மையான படிப்புகள், ஒரு வருடத்திற்குள் முடிவடைவதால், மாணவர்கள் படிக்க செல்வதில் இது குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
'சார்ந்தவர்' என்று கூறப்படும் நபர்கள் யார்?
'சார்ந்தவர்' என்பதன் வரையறை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாறுபடுகிறது. மேலும் இது பொதுவாக குடியேற்றம் மற்றும் விசா விதிமுறைகளால் தீர்மானிக்கப்படுகிறது. யுகேவை பொறுத்தவரை, 'சார்ந்தவர்' பொதுவாக குடும்ப உறுப்பினர் என வரையறுக்கப்படுகிறார். அவர் தனது நிதி உதவிக்காக, முதன்மை விசா வைத்திருப்பவரை நம்பி அவர்களுடன் இங்கிலாந்தில் வசிக்க அனுமதிக்கப்படுகிறார். இதில், மனைவி, திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் துணை(unmarried partner), 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் அடங்கும். குறிப்பிட்ட விசா வகையைப் பொறுத்து, சில சந்தர்ப்பங்களில், முதியவர்களுக்கும், 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும் சார்ந்தவர் விசா வழங்கப்படுகிறது.
திருத்தப்பட்ட விதியின் கீழ் சார்ந்திருப்பவர்களுக்கு என்ன உரிமைகள்/பயன்கள் கிடைக்கும்?
சார்ந்து இருப்பவர்களுக்கான உரிமைகள் அல்லது பயன்கள் குறிப்பிட்ட விசா வகையை பொறுத்து மாறுபடும் என்றாலும், அனைத்து விசா வகையினரும், சட்டப்பூர்வ குடியேற்றம், தேசிய சுகாதார சேவைகள் (NHS) மூலம் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல், வயது வந்தோருக்கான வேலை உரிமைகள், சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான கல்விக்கான அணுகல், முதன்மை விசா வைத்திருப்பவரின் விசா செல்லுபடியாகும் வரை, யுகேவிற்கு உள்ளும், வெளியவும் பயணிக்கும் உரிமைகளை அவர்கள் பெற முடியும். சார்ந்திருப்பவர்களின் விசா காலம், முதன்மை விசா வைத்திருப்பவர்களின் விசா காலத்தை பொறுத்து அமைகிறது. இருப்பினும் தற்போது திருத்தப்பட்ட வீதியில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம் என்பதால், யுகே உள்துறை அமைச்சகத்தின் மூலம் அதை தெரிந்து கொள்வது நல்லது.