பொதுமக்களுடன் நீந்திய வைரல் திமிங்கலம் ஆஸ்திரேலிய கடற்கரையில் இறந்தது
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் அருகே உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் உள்ள மணற்பரப்பில், கடந்த வார இறுதியில் தென்பட்ட திமிங்கலம் இறந்தது. 49 அடி நீளம் கொண்ட அந்த திமிங்கலம் மணப்பரப்பிலிருந்து மீட்கப்பட்டு, திரும்ப கடலுக்குச் சென்றபோது உயிரிழந்ததாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "அது மிகவும் சுறுசுறுப்பாக நகர்ந்து. 200 அல்லது 300 மீட்டர்கள் மட்டுமே நீந்தியது. அதன் சுவாசம் அது உண்மையில் அதன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்பதற்கான சில அறிகுறிகளை எங்களுக்குக் கொடுத்தது," என்று அந்த அமைப்பின் அதிகாரி மார்க் குக்லி கூறினார்.
சனிக்கிழமை கடற்கரையில் தென்பட்ட திமிங்கலம்
கடந்த சனிக்கிழமை ராக்கிங்ஹாம் கடற்கரை ஓரத்தில் நீந்திய அந்த திமிங்கலத்தின் அருகில் சென்ற மக்கள், அதை தொட்டும் அதனுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். "சனிக்கிழமையன்று திமிங்கலம் கடற்கரைக்கு வந்தபோது ஏற்கனவே அழுத்தத்தில் இருந்திருக்கும், மக்களுடனான தொடர்பு அதன் மன அழுத்தத்தை அதிகரித்திருக்கலாம்" என்று, அரசாங்க கடல் பாலூட்டி நிபுணர் கெல்லி வாப்பிள்ஸ் திங்களன்று தெரிவித்தார். சனிக்கிழமை மனிதர்களுடன் அதன் தொடர்புக்கு பிறகு, அந்த திமிங்கலம் மீண்டும் கடலுக்குள் சென்று விட்டது. பின்பு திங்கட்கிழமை காலையில் அது மணப்பரப்பில் சிக்கியது. பின்னர் அந்த கடற்கரையை மூடிவிட்டு, அதிகாரிகள் அதை ஆழமான கடலுக்குள் மீட்கும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.