ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாற்றம்
உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை திடீரென்று மாற்றியுள்ளார். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் துணைப் பிரதமரான சிவிலியன் ஆண்ட்ரி பெலோசோவ் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்த செர்ஜி ஷோய்கு, ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக இதுவரை இருந்த நிகோலாய் பட்ருஷேவுக்குப் பதிலாக செர்ஜி ஷோய்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் பதவியில் மாற்றம் இல்லை
மேலும், செர்ஜி ஷோய்குவுக்கு இராணுவ-தொழில்துறை வளாகத்திற்கான பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை வெளியானது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்மொழிந்துள்ள இந்த மாற்றங்களை சீக்கிரமே ரஷ்ய நாடாளுமன்ற குழு ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக இராணுவ படைகளை அனுப்பியதில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்மொழியும் மிகப்பெரிய மாற்றம் இதுவாகும். செர்ஜி ஷோய்குவுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற பதவிக்கும் உயர்ந்த பதவியே தற்போது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் மூத்த வெளியுறவு அமைச்சரான செர்ஜி லாவ்ரோவும் தனது பணியில் நீடிப்பார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.