உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது மாபெரும் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தி மிரர் கணித்துள்ளது. ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்து ஒரு வருடம் முழுமையாக முடிந்திருக்கும் காலகட்டத்தில் இந்த செய்திகள் வெளிவந்துள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த போர் முடிவுக்கு வருவதற்கு மூன்று விதமான வாய்ப்புகள் இருக்கிறதாம். ஒன்று ரஷ்யாவின் நடவடிக்கைகள் நாட்டின் அண்டை நாடுகளை அச்சுறுத்தும். இரண்டாவதாக, உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு போரில் முன்னேற்றத்தை காணும். மூன்றாவது ரஷ்யாவின் படையெடுப்பு "ரஷ்ய இராணுவ தேக்கநிலை மற்றும் உள்நாட்டு நம்பிக்கை இழப்பு" ஆகியவற்றைத் தொடர்ந்து வீழ்ச்சியடையக்கூடும்.
தாக்குதலில் பின்தங்கி வரும் ரஷ்யா
சமீபத்திய மதிப்பீட்டின்படி, கடந்த சில வாரங்களாக ரஷ்யர்களால் ஒரு மாபெரும் தாக்குதலை எடுத்து நடத்த முடியவில்லை. மேலும், ரஷ்யர்களால் ஒருங்கிணைந்த ஆயுதத் தாக்குதலை இதுவரை திறம்பட ஒருங்கிணைக்க முடியவில்லை. ரஷ்ய இராணுவம், 30 ஆண்டுகளாக இது போன்ற போருக்கு பயிற்சி செய்யவில்லை. அது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. "போதிய பயிற்சி பெறாத துருப்புக்களுடன் இருந்து கொண்டு கடுமையான பீரங்கிகளின் மறைவின் கீழ் தற்கொலை தாக்குதல் நடத்துவதே முக்கிய தரைப்படைகளின் தந்திரோபாயமாக உள்ளது" என்று அந்த மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது. எனவே, ரஷ்யாவின் அடுத்த முயற்சி தற்கொலை படை தாக்குதலாக தான் இருக்கும் என்று அந்த அறிக்கை ஒரு கருத்தை முன்வைக்கிறது.