அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்- விவேக் ராமசாமி
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளின் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய நடந்த விவாதத்தில் விவேக் ராமசாமி பேசியுள்ளார். அவரின் இந்த கருத்து பலரையும் சற்றே பின்வாங்க வைத்துள்ளது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான விவாதம், அமெரிக்காவின் கலிபோனிய மாகாணத்தில் நடந்தது. இதில், இந்திய வம்சாவளியினரான விவேக் ராமசாமி, ப்ளோரிடா மாகாண கவர்னர் டி சாண்டிஸ், முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹேலி உள்ளிட்ட ஆறு பேர் பங்கேற்றனர். விவேக் ராமசாமி அமெரிக்காவின் குடியுரிமை,தேர்தல், வெளியுறவு கொள்கை உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறார்.
14வது சட்ட திருத்தத்தை நான் படித்திருக்கிறேன்- விவேக் ராமசாமி
அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தில் 14வது சட்ட திருத்தம், குடியுரிமை பற்றி பேசுகிறது. அமெரிக்காவிலோ அல்லது அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளிலோ பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற நபர்கள் அமெரிக்க குடிமகன்கள் என 14வது சட்ட திருத்தம் கூறுகிறது. இது குறித்து பேசிய விவேக் ராமசாமி, "சட்டவிரோத குடியேறிகளுக்கு, இந்நாட்டில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைகளின் பிறப்புரிமை குடியுரிமையை(Birthright citizenship) நான் ரத்து செய்து விடுவேன்"என்று வாதிட்டுள்ளார். "அரசியலமைப்பின் 14 வது சட்ட திருத்தம் பற்றி எதிர்ப்பாளர்கள் என்னிடம் வாதிடலாம். நான் அரசியலமைப்பின் 14 வது சட்ட திருத்தத்தை படித்திருக்கிறேன்" என பேசினார். குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் ரேசில் விவேக் ராமசாமி தற்போது நான்காம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.