அமெரிக்க கிரீன் கார்டு பெற புதிய கெடுபிடி: செப்டம்பர் 18 முதல் அமலுக்கு வரும் 'பப்ளிக் சார்ஜ்' விதிமுறைகள்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் குடியுரிமை பெற (Green Card) விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், 'பப்ளிக் சார்ஜ்' தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் அமலுக்கு வரும் இந்த விதிமுறைகளின் கீழ், விண்ணப்பதாரர்கள் அரசு உதவித் தொகைகளையோ அல்லது பிற சமூக நலச் சலுகைகளையோ எதிர்பார்ப்பார்களா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்வர்.
மாற்றங்கள்
புதிய பப்ளிக் சார்ஜ் விதியில் மாற்றங்கள் என்ன?
முந்தைய பைடன் நிர்வாகத்தின் 2022 விதிமுறைகளின்படி, அரசால் வழங்கப்பட்ட நிதி உதவிமற்றும் நீண்டகாலப் பராமரிப்பு உதவியை மட்டுமே கணக்கில் எடுத்தனர்.
ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் கீழ் அதிகாரிகள் 5 முக்கிய அம்சங்களை ஆய்வு செய்வர்:
விண்ணப்பதாரரின் வேலை செய்யும் திறன் மற்றும் உடல்நலத் தகுதி.
விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானம், சொத்துக்கள்.
தகுதியான வேலையைப் பெறும் அளவிலான திறன்.
உணவு உதவித் திட்டங்கள், வீட்டு வசதி உதவி, மற்றும் கல்லூரி கல்விக்கான நிதி உதவிகளைப் பயன்படுத்தியிருத்தல். விண்ணப்பதாரரைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் (அமெரிக்கக் குடிமக்களாக இருந்தாலும் கூட) இச்சலுகைகளைப் பெற்றிருந்தாலும், அது விண்ணப்பதாரரின் தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
பாதிப்புகள்
இந்தியர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்
அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கிரீன் கார்டுகளில் சுமார் 7% இந்தியர்களுக்குக் கிடைக்கிறது.
குறிப்பாக, வேலைவாய்ப்பு சார்ந்த மற்றும் குடும்ப அடிப்படையிலான கிரீன் கார்டுகளுக்காகப் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்தியர்கள், பார்ம் I-485 விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது இப்புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவர்.
இந்தக் கடுமையான விதிமுறைகள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தாது.
அகதிகள், புகலிடம் கோருவோர், மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், தற்காலிகப் பாதுகாப்பு அந்தஸ்து(TPS) பெற்றவர்கள் மற்றும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18 அல்லது அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் USCIS Form I-485 விண்ணப்பங்கள் அனைத்திற்கும் இந்த புதிய சட்டத்திட்டங்களே பொருந்தும் என்பதால், இந்திய விண்ணப்பதாரர்கள் கூடுதல் கவனத்துடன் தங்களது நிதியாதாரங்களையும் ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டியது அவசியமாகும்.