ஈரானுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதாரத் தடை: இந்தியாவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
SCO உச்சிமாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசிய சில நாட்களில், ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்த பேட்டி ஒன்றில், உலக நாடுகள் ஈரானுடன் தூதரக உறவுகளை வைத்திருப்பதை அமெரிக்கா அறிந்துள்ளது எனக் குறிப்பிட்டார். இருப்பினும், அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானுக்கு வருவாய் ஈட்டவோ அல்லது தடைகளைத் தவிர்க்கவோ எந்தவொரு நாடும் உதவக் கூடாது என அவர் தெளிவுபடுத்தினார். பயங்கரவாதத்திற்கு நிதிளிக்கவும் அணுஆயுதங்களை உருவாக்கவும் பயன்படும் இத்தகைய பொருளாதார உதவிகளை எந்த நாடு செய்தாலும், அந்நாடுகளின் மீதும் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என எச்சரித்தார்.
சந்திப்பு
பிரதமர் மோடி - அதிபர் பெசெஷ்கியான் சந்திப்பு
முன்னதாக, பிஷ்கேக் உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் ஈரான் அதிபர் பெசெஷ்கியான் இடையேயான சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்துவது மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடல்வழி வர்த்தகம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது.
ஈரான் அதிபர் பெசெஷ்கியான், அமைதியை ஏற்படுத்த இந்தியா தனது தூதரக செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் அமெரிக்காவின் புதிய 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' பொருளாதார நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என ஈரான் சாடியுள்ளது.