ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம்: 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை
செய்தி முன்னோட்டம்
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்ததாகக் கூறி, இந்தியாவில் இயங்கி வரும் 4 தனியார் நிறுவனங்கள் மற்றும் 3 இந்தியக் குடிமக்கள் மீது அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட் என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் சர்வதேச நிதி ஆதாரங்களை முற்றிலுமாக முடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
தடை
தடைகளுக்கு உள்ளான இந்திய நிறுவனங்கள் மற்றும் நபர்கள்
அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சதாசிவா ஓவர்சீஸ் லிமிடெட், பிபி சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட், பிரக்ருதிஸ் இன்ஃப்ரா இம்பேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் போர்டீஸ் பார்ட்னர்ஸ் எல்எல்பி ஆகிய 4 நிறுவனங்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், பிபி சாஃப்ட்வேர் இயக்குனர் பிரஷாந்த் கார்க் மற்றும் போர்டீஸ் பார்ட்னர்ஸ் அமைப்பின் பங்குதாரர்களான இத்ரிஸ்மியா அஷ்ரஃப்மியா ஷேக், ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி ஆகிய 3 இந்தியர்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
குற்றச்சாட்டு
$119 மில்லியன் மதிப்பிலான சட்டவிரோத வர்த்தகக் குற்றச்சாட்டு
சதாசிவா ஓவர்சீஸ் நிறுவனம் சுமார் 69 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரான் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல பிபி சாஃப்ட்வேர் மற்றும் பிரக்ருதிஸ் இன்ஃப்ரா நிறுவனங்கள் தலா 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளன.
இதன் மூலம் இந்த 3 நிறுவனங்களும் சேர்ந்து மொத்தம் 119 மில்லியன் டாலர் (சுமார் ₹1,000 கோடி) மதிப்பிலான ஈரானியப் பொருட்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
போர்டீஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் சுங்கத் தரகராக செயல்பட்டு இந்த சரக்குகளை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எகனாமிக் டி-டே
அமெரிக்காவின் 'எகனாமிக் டி-டே' எச்சரிக்கையும் ஈரானின் பதிலும்
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட் இந்த நடவடிக்கையை ஈரானுக்கு எதிரான பொருளாதார டி-டே (Economic D-Day) எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடன் எந்த வடிவில் பொருளாதார வர்த்தகம் வைத்துக்கொண்டாலும் அவர்கள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனக் கெடுபிடி விதித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்காவின் இந்தத் தடையை முற்றிலும் நிராகரித்துள்ள ஈரான் அரசு, இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்றும், தங்களுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் மிரட்டல்களைத் தங்களது வர்த்தகக் கூட்டாளிகள் ஒருபோதும் பொருட்படுத்த மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளது.