அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ்
29 வயதுடைய கறுப்பினத்தவரான டயர் நிக்கோல்ஸ் என்பவரை கொடூரமான முறையில் போலீஸ் அடிக்கும் வீடியோ காட்சிகளை அமெரிக்காவின் மெம்பிஸ் காவல்துறை நேற்று(ஜன 27) வெளியிட்டது. நிக்கோல்ஸ் ஜனவரி 10 அன்று, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் பலத்த காயத்தினால் உயிரிழந்தார். ஐந்து மெம்பிஸ் அதிகாரிகள் நிக்கோல்ஸை அடித்தததற்காக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் ஐந்து பேருமே கறுப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்ற ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது ஜார்ஜ் பிலாய்ட் என்ற கறுப்பினத்தவர் ஒருவர் போலீஸ் வன்முறையால் உயிரிழந்தார்.
வெளியான வீடியோ காட்சிகளில் இருக்கும் விவரங்கள்
போலீஸின் பாடிகேம்கள் மற்றும் ஒரு சிசிடிவி கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட நீண்ட வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நிக்கோல்ஸை ஒரு காவலர் குழு டேசரைப் பயன்படுத்தி தாக்குகிறது. "நான் எதுவும் செய்யவில்லை ... நான் வீட்டிற்கு தான் சென்று கொண்டிருந்தேன்" என்று கத்தும் நிக்கோல்ஸை அதிகாரிகள் இழுத்துச் செல்வதை ஒரு வீடியோ கிளிப் காட்டுகிறது. நிக்கோல்ஸை குப்புற படுக்க வைத்து அவரது முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடிக்கும் காட்சிகளும் இதில் தெரிகிறது. இதில் போலீஸ் அதிகாரிகள் நிக்கோல்ஸை அடித்து உதைக்கும் போது அவர் "அம்மா.. அம்மா" என்று கதறி அழுகிறார். போலீஸின் வன்முறையால் இன்னொருவர் உயிரிழந்திருப்பதால் இந்த வீடியோ தற்போது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.