LOADING...
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: ஈரானுக்கு ஒரு நாளைக்கு 435 மில்லியன் டாலர் இழப்பு
போரை அமெரிக்கா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: ஈரானுக்கு ஒரு நாளைக்கு 435 மில்லியன் டாலர் இழப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 14, 2026
09:12 am

செய்தி முன்னோட்டம்

ஈரானுக்கு எதிரான தனது பொருளாதாரப் போரை அமெரிக்கா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையினால், ஈரானின் பொருளாதாரம் நாளொன்றுக்கு பல மில்லியன் டாலர் இழப்புகளை சந்திக்க நேரிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முற்றுகையினால் ஈரானுக்கு நாளொன்றுக்கு சுமார் 435 மில்லியன் USD(சுமார் ரூ.3,600 கோடி) வரை இழப்பு ஏற்படக்கூடும் என 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஏற்றுமதி முடக்கப்படுவதால் மட்டும் 276 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஈரானின் 90 சதவீத ஏற்றுமதி நடைபெறும் 'கார்க் தீவு' ஏற்கனவே குண்டுவீசித் தாக்கப்பட்ட நிலையில், தற்போதைய முற்றுகை ஈரானின் வருமானத்தை முற்றிலுமாக முடக்கும்.

அமெரிக்கா

அமெரிக்காவின் ராணுவ பலமும் போர்க்கப்பல்களும்

இந்த முற்றுகையை அமல்படுத்த அமெரிக்கா தனது கடற்படையின் 15 அதிநவீன போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவித்துள்ளது. குறிப்பாக, 'USS Tripoli என்ற பிரம்மாண்டமான நீர்நிலம் புகும் தாக்குதல் கப்பல் (Amphibious assault ship) அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இருந்து 'F-35B லைட்னிங் II' வகை ஸ்டீல்த் போர் விமானங்கள் மற்றும் 'MV-22 ஆஸ்ப்ரே' ரக விமானங்கள் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. திங்களன்று மாலை முதல் இந்த முற்றுகை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.

மாற்று வழி

முற்றுகையின் வீச்சும் மாற்று வழிகளும்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஈரான் துறைமுகங்களில் இருந்து புறப்படும் மற்றும் அங்கு நுழைய முயலும் அனைத்துக் கப்பல்களுக்கும் பொருந்தும். இருப்பினும், ஈரான் அல்லாத பிற நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஈரான் 'ஜாஸ்க் டெர்மினல்' போன்ற மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது. மேலும், முற்றுகைக்கு வெளியே ஏற்கனவே சுமார் 154 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைக் கப்பல்களில் ஈரான் இருப்பு வைத்துள்ளதால், குறுகிய காலத்திற்குப் பாதிப்புகளை ஈடுகட்ட முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தத் தீவிரமான ராணுவ நடவடிக்கை, வளைகுடா பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement