Loading...
அமெரிக்கா ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி 
அமெரிக்கா ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்

அமெரிக்கா ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி 

எழுதியவர் Sekar Chinnappan
Jul 18, 2026
07:11 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் முற்றிலும் முறிந்துபோயுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளும் வான்வழியாகவும் கடல்வழியாகவும் மாறி மாறித் தங்களது அசுரத்தனமான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்திய நேரப்படி சனிக்கிழமை (ஜூலை 18) அதிகாலை அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் தளங்களைக் குறிவைத்து 7வது நாளாகத் தனது தொடர் புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் ராணுவத் திறன்களை அடியோடு சிதைப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவான சென்ட்காம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

தரைவழித் தாக்குதல்

தரைவழித் தாக்குதல் எச்சரிக்கையும் டொனால்ட் டிரம்பின் அதிரடித் திட்டமும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான வான்வழித் தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஈரானின் கடற்கரைப் பகுதிகள் அல்லது தீவுகளைக் கைப்பற்ற தரைவழி ராணுவத் தாக்குதல் நடத்துவதையும் தாங்கள் மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் சிக்னல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இஸ்ரேல் நாட்டிற்குப் பல டஜன் கூடுதல் வான்வழி எரிபொருள் நிரப்பும் போர் விமானங்களை அனுப்ப டிரம்ப் ஆலோசித்து வருவதாக ஆக்ஸியோஸ் ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈரான் ராணுவம்

முழு அளவிலான போரைத் தொடங்குவோம் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை

அமெரிக்காவின் இந்தத் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால், ஈரான் தற்காப்பு நிலையிலிருந்து மாறி முழு அளவிலான தாக்குதல் நிலைக்கு நகரும் என ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் அவர் முழங்கியுள்ளார்.

மேலும், அமெரிக்க ராணுவத்திற்குத் தங்கள் நாட்டின் எல்லையைப் பயன்படுத்த அனுமதிக்கும் அண்டை நாடுகளிலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீதும் கடுமையான பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரானிய ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.

ADVERTISEMENT

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்துச் சிதறிய எண்ணெய் டாங்கர்கள்

இதற்கிடையில், உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திக்குத் தெற்கே இரண்டு பிரம்மாண்ட எண்ணெய் டாங்கர் கப்பல்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்புகளால் தீப்பற்றி எரிவதாக ஈரானிய ஊடகங்கள் சனிக்கிழமை அதிகாலை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

ஈரானிய கடற்படையின் கடுமையான எச்சரிக்கைகளை மீறிச் சென்றதால் இந்தக் கப்பல்கள் கண்ணிவெடி பாதையில் சிக்கியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு காரணமாக தற்பொழுது ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் மூடப்பட்டுவிட்டதாகவும், அது ஆபத்தான பகுதியாக மாறிவிட்டதாகவும் தஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் சென்ட்காம் இதையும் மறுத்துள்ளது.

ADVERTISEMENT

ஈரான்

பஹ்ரைன் மற்றும் ஈராக் அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை வீச்சு

அமெரிக்கா விதித்துள்ள கடுமையான கடற்படை முற்றுகைக்குப் பதிலடியாக, பஹ்ரைன் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்காவின் ட்ரோன் கட்டுப்பாட்டு மையத்தின் மீது ஈரான் அசுரத்தனமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, பஹ்ரைனின் முக்கியச் செயற்கை நுண்ணறிவுக் கட்டுப்பாட்டு மையத்தையும் (AI Centre) தங்களது ஏவுகணைகள் அழித்துவிட்டதாக ஐஆர்ஜிசி உரிமை கோரியுள்ளது.

இதேபோல், ஈராக் நாட்டின் சுலைமானியா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் குர்திஷ் பிரிவினைவாத நிலைகளைக் குறிவைத்தும் ஈரான் மிகக் கடுமையான தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதால் ஒட்டுமொத்த வளைகுடாப் பகுதியும் போர்க்களமாக மாறியுள்ளது.

ADVERTISEMENT