Loading...
21 வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றம்; டெல்லி போலீஸ் நடவடிக்கை
சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ நேற்று அவரை சந்தித்தார்

21 வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றம்; டெல்லி போலீஸ் நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2026
08:19 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை டெல்லி போலீசாரால் அங்கிருந்து அகற்றப்பட்டு வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். 59 வயதான சோனம் வாங்சுக்கின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீதிமன்ற உத்தரவின்படி சோனம் வாங்சுக் அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடையை ஏற்படுத்த முயன்றதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. எனினும், போலீசார் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு அவரைப் பாதுகாப்பாக மீட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் 21-வது நாளை எட்டிய நிலையில், சோனம் வாங்சுக் வெறும் உப்பும் தண்ணீரும் மட்டுமே அருந்தி வந்ததால் அவரது உடல் எடை 9 கிலோவிற்கும் அதிகமாகக் குறைந்து மிகவும் பலவீனமடைந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

கோரிக்கை

மனைவியின் கோரிக்கையையும் மறுத்த வாங்சுக்

நேற்று, வெள்ளிக்கிழமை அவரது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ போராட்டக் களத்திற்கு நேரில் வந்து, நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்களின் கவலையை எடுத்துரைத்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

எனினும், "இது எனது வழி, எனது மன உறுதி" எனக் கூறி வாங்சுக் அதை மறுத்துவிட்டார்.

லடாக்கின் குளிர்ச்சியான தட்பவெப்பநிலையோடு ஒப்பிடும்போது, டெல்லியின் கடுமையான வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதத்தில் 20 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது லடாக்கின் 40 நாட்களுக்குச் சமம் என அவரது மனைவி கவலை தெரிவித்தார்.

ADVERTISEMENT

அரசின் மௌனம்

நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டமும் அரசின் மௌனமும்

நீட் முறைகேடுகளுக்கு காரணமான கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்திருந்த வாங்சுக்,"வெளியில் இருந்து நான் பலவீனமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் வலுவாக இருக்கிறேன்" என்று நேற்று தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.

மேலும், திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்றும், ஒருவேளை தாம் இறந்துவிட்டால் தனது 'ஆவி' அந்தப் பேரணியில் கலந்துகொள்ளும் என்றும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் CJP மற்றும் அதன் ஆதரவாளர்களை, நாசகார சக்திகளின் பி-டீம் என தர்மேந்திர பிரதான் சாடியுள்ளார்.

மத்திய அரசு இதுவரை போராட்டக்காரர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் தொடங்காத நிலையில், அரசு உடனடியாக தலையிட்டுப் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

ADVERTISEMENT