ஈரானில் பயங்கர வெடிப்பு: அணுசக்தி மையத்தைக் குறிவைத்த அமெரிக்கா - இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மற்றும் ராணுவ மையமான 'இஸ்பஹான்' (Isfahan) நகரின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று அதிகாலை பயங்கரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலானது ஈரானின் ஆயுதக் கிடங்குகளை நிலைகுலைய செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் இஸ்பஹான் நகரின் இரவு வானம் ஆரஞ்சு நிறத் தீப்பிழம்புகளால் ஒளிர்வதும், அடுத்தடுத்து பல சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்வதும் பதிவாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 BREAKING: President Trump just posted a video of MASSIVE explosions in Isfahan, Iran following what’s believed to be U.S.-Israeli airstrikes
— Nick Sortor (@nicksortor) March 31, 2026
We clearly hit something pretty big… pic.twitter.com/3rg7aGkeEF
பங்கர் பஸ்டர் குண்டுகள்
பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் அணுசக்தி மையம் தகர்ப்பு
அமெரிக்காவின் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானின் அணுசக்தி ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நிலத்திற்கு அடியில் ஆழமாகச் சென்று வெடிக்கக்கூடிய சுமார் 2,000 பவுண்டு (900 கிலோ) எடையுள்ள 'பங்கர் பஸ்டர்' ரகக் குண்டுகள் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஈரான்
அமெரிக்காவின் ரீப்பர் ட்ரோனை வீழ்த்திய ஈரான்
இந்த வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவிற்குச் சொந்தமான அதிநவீன 'MQ-9 ரீப்பர்' (MQ-9 Reaper) ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. இஸ்பஹான் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த இந்த ஆளில்லா விமானம், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டுத் தகர்க்கப்பட்டதாக ரஷ்யாவின் 'டாஸ்' (Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவின் ரீப்பர் ட்ரோன் எங்களது வான் எல்லைக்குள் நுழைய முயன்றபோது வெற்றிகரமாகத் தடுத்து அழிக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி ராணுவ மோதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்
ஜெருசலேமில் எதிரொலித்த வெடிச்சத்தம்: ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்பஹான் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இன்று அதிகாலை இஸ்ரேலை நோக்கிப் பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால் இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் குறைந்தது 10 முறை பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் நடுவானிலேயே இடைமறித்து அழித்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள 170-க்கும் மேற்பட்ட இடங்களை இலக்கு வைத்து 400-க்கும் அதிகமான குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. இது ஈரானின் ராணுவக் கட்டமைப்பைப் பெருமளவில் பாதித்துள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.