அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்தது நேரடிப் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்
செய்தி முன்னோட்டம்
ஹார்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயன்று வரும் சூழலில், அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில், CENTCOM இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ஏவுகணை அமைப்புகள், வான் பாதுகாப்பு தளங்கள், படகுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் பண்டார் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பராமரிப்பு ஊழியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி யாருக்குச் சொந்தம்?
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஈரான் அண்மையில் உருவாக்கிய 'பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம்' (PGSA), அமெரிக்கப் படைகளின் சட்டவிரோத நகர்வுகள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல தற்காலிகத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதி திரும்பிய பிறகே கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஈரான் கூறியுள்ளது. ஆனால், இந்தக் கூற்றை முற்றிலுமாக நிராகரித்துள்ள அமெரிக்கா, "ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை; அது ஒரு சர்வதேச நீரிணை, கப்பல் போக்குவரத்து வழக்கம் போல் தடையின்றி நடந்து வருகிறது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகள்
வளைகுடா நாடுகள் முழுவதும் பரவிய ஏவுகணைத் தாக்குதல்
ஹார்முஸ் பகுதியில் அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, ஈரான் தனது தாக்குதல் எல்லையை வளைகுடா நாடுகள் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. கத்தாரில் விழுந்த ஏவுகணை துகள்களால் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஈரானின் வான்வழித் தாக்குதல்களைத் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடித்துள்ளன.
அமைதி ஒப்பந்தம்
முறிந்த அமைதி ஒப்பந்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதியை நிலைநாட்ட கொண்டு வரப்பட்ட 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் பாதியிலேயே முறிவடைந்துள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருதரப்பு பேச்சுவார்த்தைக்குத் தூதுவராக முயன்ற போதிலும், "ஒற்றைத் தரப்பு ஒப்பந்தங்களின் காலம் முடிந்துவிட்டது, அமெரிக்கா தனது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்; இல்லையெனில் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று ஈரானின் முதன்மை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாஃப் எச்சரித்துள்ளார். இரு நாடுகளும் ராணுவ பலத்தைக் காட்டி வருவதால் வளைகுடா பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.